Vijay Antony: “ரோமியோ பட ப்ரோமோஷனுக்காக கிசு கிசு..” விஜய் ஆண்டனி சொன்ன சீக்ரெட்!
விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள ரோமியோ திரைப்படம் அடுத்த மாதம் ரமலான் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது.
இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமான விஜய் ஆண்டனி, இப்போது ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகக் கலைஞராக வலம் வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள ரோமியோ படத்தை அவரே சொந்தமாக தயாரித்துள்ளார். விநாயக் வைத்தியநாதன் என்பவர் ரோமியோ மூலம் இயக்குநராக அறிமுகமாக, விஜய் ஆண்டனியுடன் மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ் உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் நடந்த ரோமியோ பட பிரஸ்மீட்டில் விஜய் ஆண்டனி உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய தலைவாசல் விஜய், “ரோமியோ விஜய் ஆண்டனிக்கு நிச்சயம் பெரிய மாற்றம் கொடுக்கும். அந்த அளவுக்கு நல்லவர். பெரிய துன்பத்தை தனது மனவலிமையால் கடந்து வந்து தன் வேலையை செய்து வருகிறார் விஜய் ஆண்டனி. அந்த மனநிலையை நான் மதிக்கிறேன்.’’ என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் பரத் தனசேகர், ‘‘என் இசையில் விஜய் ஆண்டனி சார் ஒரு பாடல் பாடி இருக்கிறார். சீக்கிரம் அந்தப் பாடல் ரிலீஸ் ஆகும். இசையை பொருத்தவரை எனக்கு இந்தப் படம் பெரிய கற்றலாக இருந்தது” என்றார்.
அதேபோல், நாயகி மிருணாளினி ரவி பேசுகையில், “ரோமியோ படம் என் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். இயக்குநர் என்னை மிருணாளினி என கூப்பிட்டதே இல்லை. லீலா என்று கேரக்டர் பெயர் சொல்லிதான் கூப்பிடுவார். அந்தளவுக்கு கதையோடு ஒன்றிவிட்டார். விஜய் ஆண்டனி சார் மல்டி டாஸ்கிங் நபர். பல விஷயங்கள் அவரைப் பார்த்து தான் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தில் முதல்முறையாக நானே டப்பிங் செய்திருக்கிறேன’’ என்றார்.
இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் பேசுகையில், "ஒரு கணவனாக காதலனாக ஒரு ஆணை பெண் எப்படி பார்க்க வேண்டும் என்பதுதான் கதை. அதற்கான இன்ஸ்பிரேஷன் என் அம்மாதான். இது வழக்கமான காதல் கதை கிடையாது, சக்சஸ்ஃபுல்லான மனிதன் தன் வாழ்வில் மிஸ் செய்யும் காதல்தான் ரோமியோ. பல சர்ப்ரைஸான விஷயங்கள் கதையில் இருக்கின்றன. தன் வாழ்வில் வரும் பெண்ணை எப்படி அணுக வேண்டும் என இதில் சொல்லி இருக்கிறோம்.’’ என்றார்.
இறுதியாக பேசிய விஜய் ஆண்டனி, ‘‘விநாயக் போன்ற திறமையான இயக்குநரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி. மிருணாளினி தன்மையான நல்ல பொண்ணு. படத்தை புரோமோட் பண்ண எங்களை பத்தி கிசுகிசு கிரியேட் பண்ணலாமா என யோசித்தோம். ஆனால், எதுவுமே வொர்க்கவுட் ஆகவில்லை. முதன் முறையாக ஒரு காதல் படத்தில் நடித்துள்ளேன். ஒரு பெண் எப்படி ஆணை கொடுமைப்படுத்துகிறாள், ஆண் சமூகம் எப்படி இதை பொறுத்துக் கொள்கிறது என்பதுதான் கதை. குடும்பத்தோடு நிச்சயம் படத்தைப் பார்க்கலாம்" என்றார்.
பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, “ஆண், பெண் என எதிலும் வேறுபடுத்தாதீங்க. நமக்கு இருக்கற மாதிரியான விஷயங்கள்தான் பெண்களுக்கும். ஆண்கள் மது அருந்தினால் பெண்களும் குடிக்கலாம். நான் குடியை ஆதரிக்கவில்லை. ஆண்களை மது குடிக்க வேண்டாம்னு சொன்னால் அது பெண்களுக்கும்தான். அந்த காலத்தில் திராட்சை ரசம் என இருந்தது. ஜீசஸ் கூட குடிச்சிருக்கார். ராஜா காலத்தில் சோமபானம் என இருந்தது என தக் லைஃப் கொடுத்தார்.
What's Your Reaction?