அரசியல் குரு.. ஆர்.எம். வீரப்பன் மறைவு அதிர்ச்சி.. ஏ.சி சண்முகம் இரங்கல்

தமிழக அரசியலில் உள்ள என்னை உள்படப் பல தலைவர்களை உருவாக்கிய பெருமை ஆர்.எம். வீரப்பன் அவர்களுக்கு உண்டு என்பதைச் சொல்வதில் அவருடைய சிஷ்யனாக எனக்கு பெருமையளிக்கிறது என்று புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவருமான திரு. A.C.சண்முகம் கூறியுள்ளார்.

Apr 9, 2024 - 17:58
அரசியல் குரு.. ஆர்.எம். வீரப்பன் மறைவு அதிர்ச்சி.. ஏ.சி சண்முகம் இரங்கல்

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான ஐயா ஆர்.எம். வீரப்பன் அவர்களின் மறைவுக்கு வேலூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளரும் புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவருமான திரு. A.C. சண்முகம் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான ஐயா ஆர்.எம். வீரப்பன் அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தனி இயக்கத்தைத் துவங்கியபோது அவருக்கு வலது கரமாக இருந்து அதன் வளர்ச்சிக்குத் தூணாக விளங்கியவர்; சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினராக நான் உயர்ந்திட எனக்கு அரசியல் குருவாக இருந்து வழிகாட்டி வழிநடத்தியவர்; என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் அளவுகடந்த அன்புடையவர் ஐயா ஆர்.எம்.வீரப்பன் அவர்கள். 

இன்று தமிழக அரசியலில் உள்ள என்னை உள்படப் பல தலைவர்களை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு என்பதைச் சொல்வதில் அவருடைய சிஷ்யனாக எனக்கு பெருமையளிக்கிறது.

1980ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முதலாக ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தலைமையில் மாண்புமிகு அமைச்சராக எனக்கு வழிகாட்டினார். அதன் பின்னர் வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக நான் பணியாற்றிடவும் எனக்கு வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தவர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள்.

தமிழக அரசின் மாண்புமிகு தகவல் மற்றும் சமய அறநிலையத்துறை அமைச்சர், உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் எனப் பல பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர் ஐயா வீரப்பன் அவர்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் திருமணம் செய்து, எம்.ஜி.ஆர் அவர்களின் தலைமையில் மக்கள் நல அரசியலை முன்னெடுத்து எங்களுக்கும் அதனைக் கற்பித்தார். அதன் பின்னர் எம்ஜிஆர் கழகம் எனும் இயக்கத்தைத் துவங்கித் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வந்த அவர் இன்று மறைந்தார் எனும் செய்தி வேதனை அளிக்கிறது.

என்னை அரசியலில் வளர்த்து ஆளாக்கி அடையாளப்படுத்திய எனது அரசியல் குருவான ஐயா ஆர்.எம். வீரப்பன் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow