சாரங்கபாணி கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து வழிபாடு
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 2,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சாரங்கபாணி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார் என புராணங்கள் கூறுகின்றன.
திருமழிசையாழ்வாரின் வேண்டுகோளின்படி சயனத்தில் இருந்து சற்று எழுந்திருக்கும் நிலையான உத்தானசாயி கோலத்தில் சாரங்கபாணி சுவாமி எனும் ஆராவமுதன், கோமளவள்ளி தாயாருடன் அருள் பாலிக்கிறார். இக்கோயில் பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதால் சொர்க்கவாசல் என்ற ஒன்று தனியாக இல்லை.
பெரியாழ்வார், பேய்யாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீ ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களில் திருவரங்கம் திருப்பதிக்கு அடுத்து 3-வது தலமாக சிறப்பு வாய்ந்த வைணவ ஸ்தலமாக சாரங்கபாணி கோயில் போற்றப்படுகிறது. நாலாயிரம் திவ்ய பிரபந்தம் எனும் தமிழ் பாடல்கள் தந்த பெருமை மிக்க ஸ்தலம் இதுவாகும்.
இக்கோயிலின் ராஜகோபுரம் 171 அடி உயரம் கொண்டது. சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா சுமார் 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. சித்திரை திருவிழாவில் நாள்தோறும் இந்திர விமானம், வெள்ளி சூர்யபிரபை, வெள்ளி சேஷ வாகனம், வெள்ளி அனுமந்த வாகனம், வெள்ளி யானை வாகனம், புன்னை மர வாகனம், தங்க குதிரை வாகனம் என பல்வேறு வானங்களில் திருவீதி உலா நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (ஏப்ரல் 23) நடைபெற்றது. 500 டன் எடையுடன், 30 அடி விட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட நிலையில் 110 அடி உயரம், அலங்கார மேற்பரப்பு மட்டும் 47 அடியுடன் இந்த தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில் தேர்களில் இது 3-வது பெரிய தேராகும். இந்த தேர் திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேருக்கும் இணையாக புகழ் பெற்றதாகும்.
இந்நிலையில், மேளதாளங்கள் முழங்க தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சாரங்கபாணி சுவாமி எழுந்தருள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
What's Your Reaction?