'எடப்பாடி பழனிசாமி ஜெயிலுக்கு போவது உறுதி... டெண்டர் வழக்கை வாபஸ் வாங்கவில்லை' - ஆர்.எஸ்.பாரதி

''ஆளுநர் ரவி முதலில் பாஜக என்னும் போதையில் இருந்து வெளியே வர வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் உயர்பதவியில் மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு அரசியல்வாதியை போல அரசை விமர்சித்து வருவதை அவர் நிறுத்த வேண்டும்''

Jun 26, 2024 - 18:45
'எடப்பாடி பழனிசாமி ஜெயிலுக்கு போவது உறுதி... டெண்டர் வழக்கை வாபஸ் வாங்கவில்லை' - ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

சென்னை: எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை வாபஸ் வாங்கவில்லை என்று ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார். 

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது, உறவினர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை முறைகேடாக வழங்கிய வழக்கை நான் வாபஸ் வாங்கி விட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த வழக்கை காவல்துறை நடத்தி வருவதால், நீதிமன்ற வழிகாட்டுதல்படிதான் நான் விலகிக் கொண்டேன். 

இந்த வழக்கை நான் வாபஸ் பெறவில்லை. கட்சி தலைமையின் அனுமதி பெற்று  எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் வழக்கை தொடர்ந்து நடத்த உள்ளேன். இதேபோல் கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு சீரான திசையில் சென்று கொண்டிருக்கிறது. 

முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தது போல எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கில் விரைவில் சிறைக்கு செல்வது உறுதி. ஆர்.எஸ்.பாரதிக்கு வயதாகி விட்டதால் அவர் ஏதேதோ உளறுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

எனக்கு வயதாகி விட்டது குறித்து கவலைப்பட வேண்டியவர்  எடப்பாடி பழனிச்சாமி அல்ல. அவர் வேண்டுமானால் சிறுபிள்ளை போன்று எது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் நான் என்  வயதுக்கு ஏற்றது போல பக்குவமாக தான்  பேசுவேன்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசின் பொதுப்பட்டியலில் இருப்பதால் மாநில அரசு அதனை நடத்த முடியாது என்பது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு நன்றாக தெரியும். ஆனால் இது தெரிந்தும் அவர் திமுக அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை என வீண் குற்றச்சாட்டை கூறி வருகிறார். இவ்வாறு ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார். 

இந்த பேட்டியின்போது, 'தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம்  அதிகரித்து வருவதை அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்' என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது குறித்து ஆர்.எஸ் பாரதியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். 

இதற்கு பதில் அளித்த அவர், ''ஆளுநர் ரவி முதலில் பாஜக என்னும் போதையில் இருந்து வெளியே வர வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் உயர்பதவியில் மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு  அரசியல்வாதியை போல அரசை  விமர்சித்து வருவதை அவர் நிறுத்த வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow