நீலகிரியில் 2 ஜிக்கும் மோடி ஜிக்கும் இடையேதான் போட்டி.. ஆ.ராசா பிரிவினைவாதி.. எல்.முருகன் ஆவேசம்..
ஆ.ராசா மிகப்பெரிய பிரிவினைவாதி என்று குற்றஞ்சாட்டியுள்ள பாஜக வேட்பாளர் எல்.முருகன், நீலகிரியில் 2 ஜி, மோடி ஜி இடையேதான் போட்டி என்று கூறியுள்ளார்.
தனித் தொகுதியான நீலகிரியில் பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக சார்பில் சிட்டிங் எம்.பி. ஆ.ராசா, அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், ஆகியோர் போட்டியிடுவதால் தனிக்கவனம் பெற்று விஐபி தொகுதியாக மாறியுள்ளது. இதனால் நீலகிரி தொகுதியில் கடும் போட்டி நிலவி வருகிறது.
தேர்தல் பிரசார பரபரப்புக்கு இடையே உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் தர்மதத்திற்கும், அதர்மத்திற்குமானது. 2 ஜிக்கும் மோடி ஜிக்கும் இடையேயான தேர்தல். ஆ,ராசா மிகப்பெரிய பிரிவினைவாதி என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். நான் கழிவறைக்கு சென்றால் கூட கேமிராவை எடுத்து கொண்டு பின்னாடி வரும் அதிகாரிகள், ஆ. ராசா விஷயத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் போல் செயல்பட்டு வருகின்றனர் என்று புகார் கூறினார். தேர்தல் அதிகாரிகள் நேர்மையாக சுதந்திரமாக பணியாற்ற வேண்டும்.
திமுகவுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி குறித்து பேச அருகதை எதுவும் கிடையாது. அருந்ததி இன மக்களுக்காக இருக்கின்ற ஒரே ரிசர்வ் தொகுதி நீலகிரி. இங்கு கூட அந்த சமுதாய வேட்பாளரை நிறுத்த முடியவில்லை. இவர் சமூக நீதி குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது. ஆன்மீகத்தில் மக்கள் நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால் திமுகவினர் அவமானப்படுத்துகின்றனர்.
வேலூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் கியூ ஆர் கோடு பற்றிய கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன், சுத்தமான அரசியல் செய்து வரும் பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக தூய்மையான ஆட்சி நடத்தி வருகிறார். ஊழல்வாதிகளை பற்றி எங்களுக்கு கவலையில்லை என்று எல்.முருகன் கூல் ஆக கூறினார்.
What's Your Reaction?