பிரதமர் பேரணியில் பள்ளி மாணவர்கள்... விசாரணை மேற்கொண்டு வருவதாக சத்யபிரதா சாகு தகவல்...
பிரதமர் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றது தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு பதிலளிக்க கோவை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச்-18 ) கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் வாகன பேரணி மேற்கொண்டார். இதில் ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்ற நிலையில், பள்ளி மாணவர்கள் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு பதிலளிக்க கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
1,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்கு பதிவு மையங்களை பிரிக்க அறிவுறுத்தியதன் அடிப்படையில் கூடுதலாக 176 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், மொத்தமாக 68,320 வாக்குப்பதிவு மையங்கள் இந்த தேர்தலில் அமைக்கப்பட உள்ளதாகவும் சத்ய பிரதா சாகு தெரிவித்தார். 1,91,491 அரசு இடங்கள் மற்றும் 52,938 தனியார் இடங்களில் இருந்த அரசியல் கட்சி விளம்பரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறிய அவர், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளி வாக்காளர்களை நாளை (மார்ச் 20) முதல் வரும் 25 ஆம் தேதி வரை நேரில் சந்தித்து 12D சான்றிதழ் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், போஸ்டல் வாக்குகள் மூலம் வாக்கு செலுத்தும் நபர்களிடம் மட்டுமே இந்த விண்ணப்பம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?