சுமூகமாக முடிந்த மதுரை... வடசென்னையைக் கேட்கும் இடதுசாரிகள்?

Jan 23, 2024 - 17:23
Feb 25, 2024 - 16:35
சுமூகமாக முடிந்த மதுரை... வடசென்னையைக் கேட்கும் இடதுசாரிகள்?

2024 மக்களவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் திமுக  குழுக்களை அமைத்து பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், தொகுதி உடன்பாடுகள் குறித்த ரகசிய பேச்சுவார்த்தையையும் தொடங்கியுள்ளது. இந்தமுறை திமுக கூட்டணியைப் பொறுத்தமட்டில் பெரிதாகத் தொகுதி மாற்றமோ அல்லது வேட்பாளர்கள் மாற்றமோ இருக்காது. கூட்டணி, தொகுதி மற்றும் வேட்பாளர் உள்ளிட்டவைகளில் 80% பழைய பட்டியல் தான் என்றாலும் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே இருக்கும். இன்று மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம் நடைபெற்ற சூழலில் கோவை மற்றும் தென்சென்னை என இரு தொகுதிகளைக் கேட்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மகேந்திரன் தனித்து நின்று 11% வாக்குகளைப் பெற்றார் மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில்  கமல்ஹாசன் இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்நிலையில் புதிதாக திமுக கூட்டணிக்கு வந்துள்ள மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் கோயமுத்தூர் தொகுதியில் நிற்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகச் சென்னை திமுக கோட்டை என்றே சொல்லப்படும் சூழலில் அதற்குட்பட்ட வடசென்னை, தென்சென்னை, மத்தியசென்னை உள்ளிட்ட 3 தொகுதிகளை திமுக கூட்டணிக்கு விட்டுக்கொடுக்காது ஏனென்றால் 2019ல் காங்கிரஸ் கடைசிவரை போராடிய நிலையில் திருவள்ளூர் தொகுதியையே வழங்கியது.  அதுபோக தென்சென்னையைப் பொறுத்தமட்டில் அமைச்சரவையில் முக்கியமான இடத்தில் அங்கம்வகிக்கும் தங்கம் தென்னரசுவின் சகோதரி தமிழச்சி தங்கப்பாண்டியந்தான் தற்போது எம்.பி அதனால் மீண்டும் அவருக்கே வழங்கப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. மேலும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு சீட்டே வழங்கப்படும் என்று திமுக மேல்மட்ட வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை எப்போதும் போல 2 மக்களவை தொகுதிகள்தான். தற்போது எம்.பியாக இருக்கும் சு.வெங்கடேசனை அக்கட்சி மீண்டும் மதுரையில் களமிறக்குகிறது. பி.ராமமூர்த்தி, பி.ஜானகியம்மாள் காலம்தொட்டு எந்த கூட்டணியிலிருந்தாலும் மார்க்சிஸ்ட் மதுரையை கேட்டுப் பெறுவது வாடிக்கையான ஒன்று. 2 முறை அக்கட்சி சார்பில் பி.மோகன் எம்.பியாக இருந்த நிலையில் 2019ல் சு.வெங்கடேசன் எம்.பியாக வெற்றி பெற்றார்.

 தென்மாவட்டங்களில் திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தொகுதிகளை தொடர்ச்சியாக கூட்டணிக்கே ஒதுக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட செயலாளர்களான மணிமாறன், கோ.தளபதி தலைமையில் நடைபெற்ற அலுவல் கூட்டத்தில் இம்முறை திமுக வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று தீர்மானங்களெல்லாம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழிக்கு தனிப்பட்ட முறையில் சு.வெங்கடேசனுக்கு நல்ல வழக்கம் இருப்பதால் மதுரைக்கு எந்த வித போட்டியோ இழுபறியோ இல்லாமல் முடிவடைந்தது.

கோயமுத்தூர் மநீமவிற்கு ஒதுக்கப்படுவது ஓரளவிற்கு உறுதியான நிலையில் தற்போது கோவை தொகுதிக்கு பதில் மார்க்சிஸ்ட் கட்சி வடசென்னையை கேட்கவுள்ளதாக தெரிகிறது. ஆற்காடு வீராச்சாமி மகனும் தற்போது வடசென்னை எம்.பியாக உள்ள டாக்டர் கலாநிதி செயல்பாடுகள் திமுக மேல்மட்டத்தில் திருப்தியளிக்கவில்லை என்ற பேச்சும் அடிபடுகிறது. வடசென்னை வழங்காத பட்சத்தில் திண்டுக்கல்லை மார்க்சிஸ்ட்டுக்கு ஒதுக்கப்படலாம் என்றும் தெரிகிறது. அந்தவகையில் ஓரளவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்ததாகவே பார்க்கப்படுகிறது.

-மா.நிருபன் சக்கரவர்த்தி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow