"லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை" - இபிஎஸ் கண்டனம்...
பண்ருட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் சத்யா பன்னீர் செல்வம் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி முன்னாள் தலைவரான அதிமுகவை சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மனைவி சத்யா. இவர், 2016 முதல் 2021 வரை பண்ருட்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.
இவர் பதவி வகித்த போது பண்ருட்டி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சைக்கிள் ஸ்டாண்ட் உரிமம் வழங்குவதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சட்டமன்ற உரிமை குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர், சில மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி நகராட்சியில் ஆய்வு நடத்தியபோது சைக்கிள் ஸ்டாண்ட் உரிமத்தில் ரூ.20 லட்சம் வரை முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான நகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி முறைகேடு நடந்ததை கண்டறிந்ததால் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்பி தேவநாதன் தலைமையிலான குழுவினர் இன்று (பிப். 28) பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள சத்யாவின் வீடு, அலுவலகம் என 6 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சத்யா பன்னீர் செல்வம் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?