தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து திமுக பயப்படுகிறது - சீமான்
தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து திமுக பயப்படுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் ராசிபுரத்தில் அமைக்கப்படவிருக்கும் புதிய பேருந்து நிலையம் நகரத்திலிருந்து 7 கீமீ தூரம் தள்ளி அமைக்கப்படுவதை எதிர்த்தும், நாமக்கல் அருகே வளையப்பட்டியில் சிப்காட் தொழில் பேட்டை அமையக்கூடாது என்பதை வலியுறுத்தியும் மேலும் நாமக்கல் அருகே உள்ள தூசூர் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாமக்கல்லுக்கு வருகை புரிந்தார்.
நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்துக்கு முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம், தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்கிற சொல்லை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தது தமிழக அரசியல் சூழலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் நிலையில் நீங்கள் இதனை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு சீமான்...
“எது திராவிடம் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? எனது ஆட்சியில் புதிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் உருவாகும். தமிழக அமைச்சர்களில் எத்தனை தமிழர் உள்ளார்கள் என்று விரல் விட்டு எண்ணி விடலாம். கடந்த பொதுத் தேர்வுகளில் 50 ஆயிரம் பேர் தமிழ்த் தேர்வு எழுத வரவில்லை எங்கே உள்ளது தமிழ்? தமிழர் நாகரிகம் எது என்று யாராவது ஒருவர் கூறுகிறார்களா?” என்றவரிடம் உள் இட ஒதுக்கீடு குறித்து மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்த கருத்து பற்றிக் கேட்டதற்கு...
“திருமாவளவன் முதலமைச்சராக முடியாது என்று எல்.முருகன் கூறியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். திருமாவளவன் முதலமைச்சர் ஆவதை வரவேற்கிறோம். நாங்கள் உள் இட ஒதுக்கீடுகளை எதிர்க்கிறோம். இட ஒதுக்கீடு தேவை அதனால்தான் பொருளாதார வளர்ச்சி அடையும்” என்று கூறியவரிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு குறித்துக் கேட்டதற்கு... “தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து திமுக பயப்படுகிறது. தமிழகத்தில் தற்போது மக்கள் அரசியல் நடக்கவில்லை கட்சி அரசியல் நடைபெற்று வருகிறது. மக்கள் அரசியல் நடந்தால்தான்மக்கள் சுதந்திரமாக வாழ முடியும்” என்று சீமான் தெரிவித்தார்.
What's Your Reaction?