ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் திடீர் திருப்பம்... பாஜக மாநில நிர்வாகியை நெருங்குகிறது சிபிசிஐடி... அடுத்து நயினாரா..?
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பாஜக மாநில தொழில்துறை பிரிவு தலைவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னதாக தேர்தல் நடத்த விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், ரூ.50,000க்கும் மேல் ரொக்கமாக உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றால், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி, ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூவர், தாம்பரம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களிடம், தாம்பரம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் சேர்ந்து, போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், சென்னை அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பாஜக நிர்வாகி கோவர்தனுக்குச் சொந்தமான ஒரு ரெஸ்டாரண்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை உத்தரவிட்டது. அதன்படி, தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி போலீசார், ஹெல்பராக பணியாற்றிய விக்னேஷ் உள்பட 10க்கும் மேற்பட்ட நபர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய பாஜக மாநில தொழில்துறை பிரிவு தலைவர் கோவர்தனிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிசிஐடி போலீசார், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது, கோவர்தனுக்கு உடல்நிலை சரியில்லாததால், விசாரிக்கவில்லை என தெரிகிறது.
ஆனால், ஓரிரு நாட்களில் விசாரணையை நடத்தி முடிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதால், விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அனைத்து நபர்களும் அளிக்கக்கூடிய வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அளிக்க முடிவு செய்து இருப்பதாக சிபிசிஐடி போலீசார் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?