தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்? - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி!

Feb 24, 2024 - 16:14
Feb 24, 2024 - 16:15
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்? - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி!

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த இரண்டு நாள் சுற்றுப் பயணமாக சென்னை வந்துள்ள இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தமிழ்நாடு, கேரளா, மற்றும் கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல்துறை, மத்திய பாதுகாப்புப் படை உள்ளிட்ட செயலாக்க துறை அதிகாரிகளுடன் தேர்தல் தயார் நிலை குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர். 

இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், இன்று(24.02.2024) தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது,  "தமிழக வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வக்களித்து, இந்த தேர்தல் திருவிழாவில் பங்கேற்க வேண்டும். கடந்த இரண்டு நாட்களாக மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள், 3 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். அதேபோல், மாநில தலைமை செயலாளர்கள், டிஜிபிக்கள் மற்றும் மாநிலங்களின் மூத்த அதிகாரிகளுடனும், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் அரசியல் கட்சிகளுடனான ஆலோசனையில், மக்களவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்தியுள்ளன.

தேர்தலின் போது பணப்பட்டுவாடாவை தடுக்க பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. தற்போதே சில பகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேர்தலின் போது மது விற்பனையை தடுக்க வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தேர்தல் பிரசாரங்களில் பாகுபாடுகள் இல்லாமல் அனைத்து கட்சிகளுக்கும் ஒரே போன்ற அனுமதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.  சுதந்திரமாக, நியாயமாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது.  அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. குற்றப்பின்னனி கொண்ட வாக்காளர்கள் குறித்த விவரங்கள் வாக்களர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறிவிக்கப்படும்.

பணப்பட்டுவாடா, மது விநியோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதற்றமான தொகுதிகள் கண்டறியப்பட்டு துணை ராணுப்படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மாநிலங்களுக்கு இடையே சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தேர்தல் நேரத்தில் மாலை 5 மணிக்கு மேல் ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்ப அனுமதிக்கபடமாட்டாது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இணைய வழி பணப்பறிமாற்றத்தையும் தேர்தல் ஆணையம் கண்காணிக்கும்.  பணப்பட்டுவாடாவை தடுக்க 'சி-விஜில்' செயலி மூலம் புகார் அளிக்கலாம். புகார் அளிக்கப்பட்ட 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு 7 நாட்களுக்கு முன், பூத் ஸ்லிப் வழங்கப்படும் என்றார். தங்கம், பணம் உள்ளிட்டவை முறையான அனுமதி இல்லாமல் நடத்தப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படும். ஆம்புலன்ஸ், ஏ.டி.எம்., வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் தொடர்ந்து சோதனை செய்யப்படும்" என கூறினார்.

மேலும் படிக்க : 

https://kumudam.com/A-huge-glass-park-in-Artist-Centenary-Park-What-are-the-highlights

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow