காரைக்கால் எம்.எல்.ஏ To அமைச்சர்... புதுச்சேரியில் திருமுருகனுக்கு புதிய பொறுப்பு..
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் எம்.எல்.ஏ-வான திருமுருகனை அமைச்சராக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில், என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் 4 அமைச்சர்களும், பாஜகவுக்கு 2 அமைச்சர்களும் உள்ளனர். இதில் காரைக்கால் நெடுக்காடு தொகுதியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏவும், போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்த சந்திர பிரியங்கா, தனது பதவியை கடந்தாண்டு அக்டோபர் மாதம் ராஜினாமா செய்திருந்தார். ராஜினாமா கடிதத்தை முதலமைச்சருக்கும், ஆளுநருக்கும் தனித்தனியாக அனுப்பி இருந்த நிலையில், ஆளுநரும் அந்தக் கடிதத்தை ஏற்று மத்திய அரசுக்கு அனுப்பினார்.
இதனையடுத்து அந்த அமைச்சர் பதவி காலியாக இருந்த நிலையில், அந்த இடத்திற்கு வரப்போவது யார் என்ற கேள்வி பலரிடமும் எழுந்து வந்தது. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு, தற்போது எம்.எல்.ஏ திருமுருகனை அமைச்சராக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். காரைக்கால் சட்டமன்ற உறுப்பினராக உள்ள பி.ஆர்.என். திருமுருகனை அமைச்சராக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவருக்கு காலியாக உள்ள போக்குவரத்துத்துறை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?