சொந்த மண்ணுக்கு என்ன செய்தார் அண்ணாமலை? தொட்டம்பட்டி விசிட்
தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த அண்ணாமலை, அவரது சொந்த ஊருக்கு என்ன செய்தார்? என குமுதம் ரிப்போர்ட்டர் சார்பில் விசிட் அடிக்கப்பட்டது. அதன் விவரம் காண்க..

’பதவி இல்லை என்றால், என் சொந்த கிராமத்தில் ஆடு வளர்த்தாவது பிழைத்துக்கொள்வேன்' என்று
கம்பீரமாகச் சொன்னவர் அண்ணாமலை. தமிழக பாஜக தலைவராக பரபரப்பாக செயல்பட்டவர் பதவி பறிப்போன பிறகு இமயமலை பாபா குகையில் தியானம் செய்யப் போனார். தற்போது மீண்டும் அமைச்சர் ஆவார் என பேசப்படும் நிலையில், அண்ணாமலை குறித்து அவரது சொந்த கிராமத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய தொட்டம்பட்டிக்கு விசிட் அடித்தது குமுதம் ரிப்போர்ட்டர் குழு.
கரூர் பொள்ளாச்சி சாலையில் இருக்கிறது தொட்டம்பட்டி கிராமம். எப்போதும் பரபரப்பாக இருந்த அண்ணாமலையின் கிராமத்து வீடு தற்போது ஆள் அரவமின்றி பூட்டப்பட்டுள்ளது. அவரின் பெற்றோர் கரூரில் உள்ள சகோதரி விட்டில் தங்கிவிட்டார்கள். இதையடுத்து அவரது பக்கத்து வீட்டு பெரியசாமியிடம் பேச்சுக்கொடுத்தோம்.
சொந்த ஊருக்கு என்ன செய்தார் அண்ணாமலை?
”அண்னமாமலைக்கு நான் பெரியப்பா முறை, நாங்க பரம்பரை தி.மு.க. எனக்கு இப்போ 78 வயது. படிக்க அண்ணாமலை வேலையை விடும்போதே ஏதோ திட்டத்தோடதான் விடுறாருனு நினைச்சேன் அதே மாதிரி பாஜகவில் சேர்ந்து மாநிலத் தலைவராவும் ஆனார். இதனால, இந்த ஊரில் உள்ள அம்புட்டு பேரும் அண்ணாமலைக்காக பாஜகவில் சேர்த்தோம். அவராலதான் தமிழ்நாட்டுல பாஜக 11 சதவிகித ஓட்டு வாங்க முடிஞ்சது. இப்போ அவர் இல்லாததால அந்த ஓட்டுகள் திரும்ப வர்றது கஷ்டம். அவர் தலைவரா இருந்த காலத்துல ஊருக்குன்னு எதுவும் செய்யல. இங்க வருவார், போவார் அவ்வளவுதான். மத்திய அரசாங்கத்துக்கிட்ட அவருக்குள்ள செல்வாக்கை வெச்சு சொந்த ஊருக்கு ஏதாவது செஞ்சார்னா நல்லா இருக்கும்” என்றார்.
வேலுச்சாமி என்பவர், ”தி.மு.க.வில் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவன் நான். எங்க ஊர் பையன் அண்ணாமலை பா.ஜ.க மாநிலத் தலைவரா வந்ததால, நான் அவர் பின்னால வந்துட்டேன். சொந்தத் தொகுதியான அரவக்குறிச்சியில் நீங்க போட்டியிட்டா இங்குள்ள முஸ்லிம் வாக்குகள் உங்களுக்கு எதிரா விழும்னு எடுத்துச் சொன்னேன். என் சொந்த மண்ணுல போட்டியிட நான் ஏன் தயங்கணும்? ’என் முதல் தேர்தல் இங்கே தான்’ என துணிச்சலாக போட்டியிட்டார். தற்போது அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கியது பாஜகவுக்கு தான் இழப்பு” என்றார்.
செல்வராஜ் என்பவர், "ஊழல் மலிந்த அரசியல்வாதிகள் யாருக்கும் இனி எங்கள் தொட்டம்பட்டியில் ஓட்டுப் போடக் கூடாது என முடிவெடுத்திருந்தோம். ஆனால் அண்ணாமலை, ’கரப்ஷன் இல்லாத உங்க ஊர் பையன் எனக்கு ஓட்டுப் போடுங்கள்' என கேட்டுக்கொண்டார். நம் ஊரு ஆளாச்சேன்னு ஓட்டு போட முடியெடுத்தோம். ஓட்டுப் பதிவுக்கு முன்னால தாமரைக்கு ஓட்டுப் போடுங்கன்னு சொல்லி விடு வீர வந்து பணம் கொடுத்தாங்க. அண்ணாமலை தலைவராகுறதுக்கு முன்னால தொட்டம்பட்டி எப்படி இருந்ததோ இப்பவும் அப்படிதான் இருக்கு.. எந்த வளர்ச்சியும் இல்ல” என்றார்.
சொந்த இப்போ மனசு நொந்த ஊர்! (அரவிந்த், குமுதம் ரிப்போர்ட்டர், 29.04.2025)
What's Your Reaction?






