கொட்டித்தீர்க்கும் தென்மேற்கு பருவமழை.. ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்.. நிரம்பி வழியும் அணைகள்

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பில்லூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Jun 27, 2024 - 11:05
கொட்டித்தீர்க்கும் தென்மேற்கு பருவமழை.. ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்.. நிரம்பி வழியும் அணைகள்

கடந்த சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை  காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் வட்டாரத்தில்  இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மு. அருணா உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் வால்பாறையில் பெய்த கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில்  மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனிடையே தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பி வழிகிறது. இதனையடுத்து பவானி ஆற்றில் 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 
100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணை இன்று அதிகாலை 97 அடியை எட்டியது.அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் பொழிந்து வரும் கன மழையால், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு நீர் வரத்தை அதிகரித்துள்ளது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் இரண்டாவது நாளாக இன்றும் நீர்வீழ்ச்சி குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த அறிவிப்பு வரும் வரை நீர்வீழ்ச்சிக்கு வர வேண்டாம் என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

பவானிசாகர் அணை நீர்மட்டம் 60.07 அடியாக உள்ளது. நீர் இருப்பு 7.2 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7994 கன அடியாக உள்ளது. 
அணையிலிருந்து விநாடிக்கு  205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக இன்று 2- வது நாளாக களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் பார்வையிட மட்டும் வனத்துறை அனுமதி அளித்துள்ளது. 
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 97.15 அடியாக உள்ளது. பாபநாசம் அணைக்கு சுமார் 5,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் மலை பகுதியில் 18 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு அணை பகுதியில் 14 மில்லி மீட்டர் சேர்வலாறு அணைப்பகுதியில் 5 மில்லி மீட்டர் மழை பொழிவும் பதிவாகியுள்ளது.மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 78.4 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 112.53 அடியாகவும் உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருச்சாணி அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow