தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பிரத்யேக நட்சத்திர பலன்கள்!

பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி

தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பிரத்யேக நட்சத்திர பலன்கள்!
நட்சத்திர பலன்கள்

மாணவர்கள் கல்வியில் சிறக்க மகத்தான பரிகாரங்கள்!

- யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ


10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ செல்வங்கள் பொதுத்தேர்வுகளை எழுத தொடங்கி இருக்கிறார். அதே போன்று 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலும் மாணவ செல்வங்கள் இறுதித்தேர்வை எழுத போகிறார்கள். தேர்வுகளை எழுத இருக்கும் மாணவசெல்வங்களுக்கான நட்சத்திர பலன்களை பார்ப்போம்.

பூரம்

ஆர்வமும், அயராத உழைப்பும் உள்ளவர் நீங்கள். உங்களின் மாணவப்பருவம், சுக்ரதசையில் தொடங்கி, சூரிய தசை வரை இருக்கும். சிலருக்கு சந்திர தசை வரை தொடரலாம். எதிலும் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படக்கூடிய நீங்கள், பிறரது ஆலோசனைகளைக் கேட்பதால் ஏற்படும் மனக்குழப்பத்தால் சோர்ந்து விடுவீர்கள். என்றாலும் உடனடியாக அதிலிருந்து விடுபடுவீர்கள். 

உயர்கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்ல நேர்ந்தால் தவிர்க்காமல் ஏற்பது நல்லது. கல்விக்கடனுக்கான முயற்சிகளை நேரடி கவனத்தோடு செய்வது முக்கியம்.

இயல்பாக நல்லவரான நீங்கள், சட்டென உணர்ச்சி வசப்படுவதாலும், யோசிக்காமல் வார்த்தைகளைக் கொட்டுவதாலும் வாய்ப்புகளை இழப்பீர்கள். எனவே, தினமும் சில நிமிடமாவது தியானம் செய்வது நல்லது. வாகனப்பயணத்தில் வேகம் தவிர்ப்பதும் அவசியம்.எலும்பு தேய்மானம், முதுகுவலி, மூட்டுவலி உபாதைகளில் அலட்சியம் கூடாது.

சனிக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45 வரை இஷ்டதெய்வத்திற்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகளுக்கு முன் பள்ளிகொண்ட பெருமாளை தரிசியுங்கள். 3 வருடத்திற்கு ஒருமுறை ஸ்ரீரங்கம் சென்று வருவது சிறந்த பலன் தரும். மாணவப்பருவத்தின் இறுதியில், திருக்கொள்ளிக்காடு சென்று பொங்கு சனிபகவானை வழிபட்டு வருவது வளமான வாழ்வு அமைய அடித்தளமாக உதவும்.

உத்திரம்

முயற்சிகளால் எதையும் சாதிப்பவர் நீங்கள். உங்களின் மாணவப் பருவம், சூரிய தசை முதல் செவ்வாய் தசை வரை இருக்கும். நிதானமாகவும் முழுமையாகத் திட்டமிட்டும் செயல்படக்கூடிய நீங்கள் பிடிவாதத்தையும், வீண் கோபத்தையும் தவிர்த்தால் சாதனைகள் புரிந்து புகழ் பெறலாம். பெற்றோர் பெரியோர் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தாமல் ஏற்பது நல்லது.

வாய் இனிக்கப் பேசும் நட்புகளிடம் ஏமாந்து போவது இந்த நட்சத்திரக்காரர்களுக்கே உரியது. எனவே நட்பில் அதிக கவனம் தேவை. முகஸ்துதி பாடும் நட்புகளைப் புரிந்துகொண்டு ஆரம்பத்திலேயே விலக்குங்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பு உங்களுக்கு எளிதாகக்  கைகூடும். வங்கிக்கடன்கள், உயர்கல்வி முயற்சிகளை பெற்றோர், பெரியோர் ஆலோசனை, உதவி பெற்றுச் செய்யுங்கள்.

உணர்ச்சி வசப்படுவதும், பிடிவாதமும் தவிர்த்து மனதைக் கட்டுப்படுத்துவதும், விட்டுக் கொடுத்துப்போவதும் நல்லது. ஏதாவது ஓர் இசைக் கருவியை வாசிக்கப் பழகுங்கள். உங்கள் மனதில் அமைதி நிறையும். ஒற்றைத் தலைவலி, நரம்பு, அலர்ஜி பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்டதெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகள் எதையும் தொடங்கும் முன் நரசிம்மரை தரிசனம் செய்யுங்கள். 3 வருடத்திற்கு ஒருமுறை பரிக்கல் தலம் சென்று லட்சுமி நரசிம்மரை ஆராதிப்பது சிறப்பான பலன் தரும். மாணவப்பருவம் நிறைவடைந்ததும், ராமேஸ்வரம் சென்று ஈசனை தரிசித்து வாருங்கள். ஏற்றமிக்க எதிர்காலம் அமையும்.

ஹஸ்தம்

திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்பட்டு வெற்றி காணக்கூடியவர் நீங்கள். சந்திர தசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், ராகு தசை வரை தொடரும். எதிலும் நிதானமாகவும் யோசித்தும் செயல்படக்கூடியவர் நீங்கள். அதேசமயம் முக்கியமான விஷயங்களில் சட்டென எதையும் தீர்மானிக்க முடியாமல் குழம்பவும் செய்வீர்கள். அதற்கு உங்களின் அதீத உணர்ச்சிவசப்படலே காரணம். அதைத் தவிர்த்தால் எல்லாமே வெற்றியாகும்.

வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புகள் கைகூடி வரும். ஆனால் இறைவனை வழிபட்டும், பெற்றோர் ஆலோசனை கேட்டும் செயல்பட்டால், முன்னேற்றம் முடுக்கிவிடப்படும். கல்விக்கடன் தொகையைக் கையாளும்போது அலட்சியத்தால் நஷ்டப்பட நேரிடலாம். நேரடி கவனம் முக்கியம். ஆடம்பரம், கேளிக்கைகளில் நாட்டம் உள்ளவர் நீங்கள். படிக்கும் காலத்தில் ஆடம்பரப் பொழுதுபோக்குகளில் ஈடுபடாமல் இருப்பது அவசியம். இது எதிர்கால வாழ்விற்கு மிகமிக முக்கியம். கழிவுப்பாதை உபாதைகள், வயிற்றுக்கோளாறுகளில் அலட்சியம் கூடாது. வாகனத்தில் கவனச்சிதறல் தவிருங்கள்.

சனிக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல்தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகளின்போது, பெருமாள் வழிபாடு செய்யுங்கள். 3 வருடத்திற்கு ஒருமுறை திருப்பதி சென்று தரிசியுங்கள். பள்ளிப் பருவம் முடிந்ததும், மதுரை மீனாட்சி சொக்கநாதரை தரிசனம் செய்யுங்கள். உங்கள் மனம் போல் வேலை கிடைத்து வாழ்க்கை பிரகாசிக்கும்.

சித்திரை

மன உறுதியும், ஞாபகசக்தியும் உள்ளவர்கள் நீங்கள். செவ்வாய் தசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், ராகுதசை வரை இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படக்கூடிய நீங்கள் தலைக்கனம் உங்கள் செயல்களில் இல்லாமல் பார்த்துக்கொண்டால், வெற்றி உங்கள் வசமாகும். சட்டென்று வார்த்தைகளை விடுவதையும், யோசிக்காமல் தீர்மானிப்பதையும் தவிருங்கள்.

மனதில் ஏற்படும் வீண் குழப்பங்களை வளரவிடாமல் தடுக்க தியானம், யோகா பழகுவது நல்லது. இளம் வயதிலேயே நீச்சல் பழகுவதும், உடலில் இருந்து வியர்வை நன்கு வெளியேறும்படியான உடற்பயிற்சிகளைச் செய்வதும் உங்கள் சிந்திக்கும் திறனை அதிகப்படுத்தும். மனதில் பாடங்கள் நன்கு பதியும்.

இரவு நேரத்தில் வெகு நேரம் கண்விழித்துப் படிப்பதைவிட அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. வீண்பெருமை பேசும் நட்புகளைக் கழட்டிவிடுவதில் தயக்கம் கூடவே கூடாது. அலர்ஜி, ரத்தத் தொற்று, காய்ச்சல் போன்றவற்றில் அலட்சியம் தவிர்ப்பது அவசியம்.

புதன்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகளுக்கு முன் சிவபிரானை வழிபடுங்கள். 3 ஆண்டிற்கு ஒருமுறை ஸ்ரீசைலம் சென்று வழிபட்டு வாருங்கள். பள்ளிப்பருவம் முடிந்ததும், திருப்பதி சென்று பெருமாள், பத்மாவதி தாயார், கோவிந்தராஜ பெருமாளை தரிசித்துவிட்டு வாருங்கள். உரிய பணி கிடைத்து வாழ்க்கை உன்னதமாகும்.

சுவாதி

சட்டெனப் புரிந்துகொள்ளும் சமயோஜித புத்தி உள்ளவர் நீங்கள். ராகு தசையில் பிறந்த உங்களின் பள்ளிப்பருவம், குரு தசை வரை தொடரும். படிப்பதை எளிதாக நினைவில் வைத்துக்கொள்வதும், சரியான சமயத்தில் அதனை உபயோகப்படுத்துவதும் உங்கள் குணம். வெற்றி எப்போதும் உங்கள் பக்கத்திலேயே இருக்கும் என்றாலும், அலட்சியத்தாலும் அநாவசிய கோபத்தாலும் நீங்கள் அதை இழப்பீர்கள். முழு கவனத்துடன் திட்டமிட்டுச் செயல்படுவதும், சினம் தவிர்ப்பதும் சீரான நன்மையைத் தரும். வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பு வாசல் தேடி வரும்.

நட்பு வட்டாரத்தில் உங்களுக்கு நற்பெயர் இருக்கும். அதேசமயம் கூடா நட்புகளையும் திசைதிருப்பும் நட்புகளையும் அடையாளம் கண்டு விலக்குவது நல்லது. உடல்நல பாதிப்பு அடிக்கடி ஏற்படக்கூடியவர்கள் நீங்கள். எனவே, சுகாதாரமில்லாத உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. வயிற்று உபாதைகள், தொற்றுநோய் தொல்லைகளில் உடனடி சிகிச்சை எடுப்பது நல்லது. அதிகாலை நேரமே நீங்கள் படித்திட ஏற்றது.

திங்கட்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகளுக்கு முன் பக்கத்து கோயிலில் துர்க்கையை தரிசியுங்கள். மூன்று வருடத்திற்கு ஒருமுறை பூவரசன் குப்பம் சென்று நரசிம்மரை வழிபடுங்கள். மாணவப் பருவம் நிறைந்ததும், ராமேஸ்வரம் சென்று சிவபிரானை வழிபடுங்கள். உங்கள் வாழ்வில் ஒளி பிறக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow