சட்டசபையில் அமளி.. ஸ்டாலின் பதவி விலக முழக்கமிட்ட அதிமுக எம்எல்ஏக்கள்..கூண்டோடு வெளியேற்றம்.. சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக் கோரி சட்டசபையில் முழக்கமிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

Jun 25, 2024 - 10:11
சட்டசபையில் அமளி.. ஸ்டாலின் பதவி  விலக முழக்கமிட்ட அதிமுக எம்எல்ஏக்கள்..கூண்டோடு வெளியேற்றம்.. சஸ்பெண்ட்


கள்ளக்குறிச்சியில் கடந்த 19ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராய மரணங்களை தடுக்க தவறிய திமுக அரசு மீது அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். 

கள்ளச்சாராய மரணம் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதுவரைக்கும் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பது அதிமுகவினரின் வலியுறுத்தலாகும்.சட்டசபையிலும் கள்ளக்குறிச்சி விவகாரம் கடந்த 4 நாட்களாக அனலை கிளப்பி வருகிறது. கேள்வி நேரத்தை தள்ளி வைத்து விட்டு கள்ளக்குறிச்சி மரணம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பது அதிமுகவினர் கோரிக்கை. 

நான்காவது நாளாக இன்றும் சட்டசபை கூடிய உடன் இன்றும் கறுப்பு சட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்கு வந்தனர்.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை வைத்தனர். அதற்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவிக்கவே, அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் முழக்கமிட்டனர். வேண்டும் வேண்டும்.. சிபிஐ விசாரணை வேண்டும்.. வேண்டும் வேண்டும் பதவி விலக வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் அப்பாவுவை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.


அனைவரும் அமைதியாக அமருங்கள் என்று கூறிய அப்பாவு கேள்வி நேரம் முடிந்த பிறகு கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து விவாதிக்கலாம் என்று தெரிவித்தார் அப்பாவு. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போல செயலில் ஈடுபட்ட அதிமுகவினரை வெளியேற்றினேன். முதல்வர் கேட்டுக்கொண்டதை அடுத்து அனைவரையும் மீண்டும் அவைக்கு வர உத்தரவிட்டேன். ஆனால் அதிமுகவினர் அவைக்கு வரவில்லை என்று கூறினார் அப்பாவு. 

அதிமுகவினர் நடந்து கொள்வது சபை மரபல்ல. ஏற்கனவே முதல்வராக இருந்தவர். எதற்காக இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கேட்டார் அப்பாவு. சபாநாயகர் பேசிக்கொண்டிருக்கும் போதே அதிமுக எம்எல்ஏக்கள் முழக்கமிட்டனர். இதனையடுத்து அவையை முடக்கிய அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் சட்டசபையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். சட்டசபையில் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும்  சஸ்பெண்டு செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். சட்டசபையில் இது தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow