TVK Vijay: டாப் கியரில் தளபதி... திமுக அரசை நேரடியாக விமர்சித்த விஜய்... இதுதான் காரணமா..?

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தவெக தலைவர் விஜய் திமுக அரசை நேரடியாக விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jun 20, 2024 - 12:30
TVK Vijay: டாப் கியரில் தளபதி... திமுக அரசை நேரடியாக விமர்சித்த விஜய்... இதுதான் காரணமா..?

சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான விஜய் விரைவில் நேரடியாக அரசியலில் களமிறங்குகிறார். தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வரும் அவர், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியையும் தொடங்கிவிட்டார். இதனால் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ள விஜய், அடுத்து வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். தவெக கட்சியின் தலைவராக அடிக்கடி அறிக்கை வெளியிட்டு வரும் விஜய், கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் விவகாரத்தில் திமுக அரசை நேரடியாக விமர்சித்துள்ளார். தவெக தலைவர் விஜய்யின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் ரொம்பவே கவனம் ஈர்த்துள்ளது. 

அதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்த நாள் முதல் இதுவரை எந்த கட்சியையும் நேரடியாக விமர்சித்தது கிடையாது. முக்கியமாக நீட் தேர்வு முதல் பல பிரச்சினைகளுக்கு எதிராகவும் விஜய் தனது கட்சி சார்பில் கண்டன அறிக்கைகள் வெளியிட்டுள்ளார். அதில், மத்திய பாஜக அரசையோ அல்லது மாநில அளவில் திமுக அரசையோ நேரடியாக குறிப்பிட்டு விமர்சித்தது இல்லை. ஆனால், கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் விவகாரத்தில், “இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார். இதன்மூலம் திமுகவுக்கு எதிரான ஒரு கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை உருவாக்குகிறாரா விஜய் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

முன்னதாக விஜய்யின் லியோ பட இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழக அரசு நெருக்கடி கொடுத்ததாகவும், அதனால்தான் அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகளை காரணம் காட்டி இதற்கு சாக்கு போக்கு சொன்னது விஜய் தரப்பு. அதன்பின்னர் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே லியோ சக்சஸ் மீட் நடத்தப்பட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியாகின. ஏற்கனவே ரிலீஸ் நேரத்தில் விஜய்யின் படங்களுக்கு பிரச்சினை எழுவது வழக்கமாக காணப்படுகிறது. விரைவில் தி கோட் திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. அப்படி இருந்தும் தமிழக அரசு எனக் குறிப்பிட்டு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது, அவரது அரசியல் பயணத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

இதனையடுத்து விஜய்யின் ரசிகர்கள் மட்டுமின்றி நெட்டிசன்களும் இதுகுறித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதில், விஜய் அரசியலுக்கு தகுதியானவர் என நிரூபித்துவிட்டார். இதுதான் விஜய்யின் உண்மையான அரசியல் பிரவேசம். இனிமே தான் தளபதியோட அரசியல் ஆட்டமே இருக்கு. யாரை எதிர்த்து அரசியல் செய்கிறோம் என்பதை முடிவு செய்துவிட்டார் விஜய் என பலவிதமாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் அரசை குறை கூறும் விஜய், தனது படங்களில் மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிப்பது எந்தவிதத்தில் நியாயம். விஜய்யின் படங்களில் வரும் மது அருந்தும் காட்சிகளை பார்த்து இளைஞர்கள் சீரழிவது அவரின் கண்களுக்கு தெரியவில்லையா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.         

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow