சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் பிரசாரத்தை தொடங்கிய நா.த.க. வேட்பாளர்... கரும்புச்சாறு தயாரித்து வாக்கு சேகரிப்பு...

Mar 14, 2024 - 14:07
சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் பிரசாரத்தை தொடங்கிய நா.த.க. வேட்பாளர்... கரும்புச்சாறு தயாரித்து வாக்கு சேகரிப்பு...

நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் திருப்பூரில் அக்கட்சியின் வேட்பாளர் ஒருவர் கரும்பு கடையில் கரும்புச்சாறு தயாரித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளார். 

நாம் தமிழர் கட்சி, கடந்த 2016ம் ஆண்டிலிருந்து கரும்புடன் விவசாயி இருக்கும் சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. கடந்த 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட அக்கட்சி சுமார் 7 சதவீத வாக்குகளை பெற்றது. இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வந்த நாம் தமிழர் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது. அதாவது அக்கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஜக்யதா என்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சீமான் முறையிட்டபோது, தேர்தல் ஆணையத்தின் விதிகளின் படியே சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, தனது கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்படாத நிலையிலும், தொகுதிக்குட்பட்ட அண்ணா நகர், பாண்டியன் நகர், அம்மன் நகர், செட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தனது பிரசாரத்தை இன்று (மார்ச் 14) தொடங்கி உள்ளார். நாம் தமிழர் கட்சி தொண்டர்களுடன் அப்பகுதியிலுள்ள கடைகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சீதாலட்சுமி, அங்கிருந்த கரும்பு கடையில் கரும்புச்சாறு தயாரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவருக்கு அப்பகுதியினர் வரவேற்பளித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow