கள்ளச்சாரய உயிரிழப்பு: காவல் அதிகாரிகளை கைது செய்யணும்... பொங்கிய திமுக கூட்டணி கட்சிகள்!
'கள்ளச்சாரய உயிரிழப்புக்கு தமிழ்நாடு அரசின் அலட்சியப் போக்கே காரணம். இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்' என்று அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் அண்ணாமலை, புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை: கள்ளச்சாரய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக வலிறுத்தியுள்ளன.
கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி என்பவர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த பலர் இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.
இதை குடித்த பலர் கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். மேலும் சிலர் மயங்கி விழுந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட சுமார் 84 பேர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் 30 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 35 பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 9 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
'கள்ளச்சாரய உயிரிழப்புக்கு தமிழ்நாடு அரசின் அலட்சியப் போக்கே காரணம். இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்' என்று அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் அண்ணாமலை, புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதேபோல் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கள்ளச்சாரயத்தை ஒடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:-
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை:-
கள்ளச்சாரய உயிரிழப்பு வேதனை அளிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, சட்டப்பேரவை உறுப்பினர் குழுவுடன் நேரடியாக களத்துக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளது. தமிழ்நாடு அரசு இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் பின்னணியில் உள்ளவர்களை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். இனிமேல் இந்த சம்பவம் நடக்காதவாறு காவல்துறை விழிப்போடு இருக்க வேண்டும்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்:-
கள்ளச்சாரயத்தால் இனி மரணம் ஏற்படாத வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் எடுத்துள்ள சட்டபூர்வ நடவடிக்கைக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு அதிகாரிகளை அரசு முடுக்கி விட வேண்டும். கள்ளச்சாராய விற்பனைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்:-
தமிழ்நாட்டில் எந்த ஆட்சி நடைபெற்றாலும் கலாச்சாராய சாவுகள் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
கள்ளச்சாராய வியாபாரத்திற்கு துணை போன மாவட்ட அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும். கள்ளச்சாராய உற்பத்திக்கு பயன்படும் மெத்தனாலை கள்ளச் சந்தையில் வியாபாரம் செய்த நிறுவனம் மீது காவல்துறையினர் எந்தவித வழக்கும் போடவில்லை.
இந்த சம்பவம் குறித்து நாளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
விசிக எம்எல்ஏ சிந்தனைச் செல்வன்:-
கள்ளச்சாரய விவகாரத்தில் காவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்வது ஒரு தண்டனை அல்ல. குற்றத்திற்கு உடந்தையாக இருந்த காவல் அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.100 சதவீதம் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
What's Your Reaction?