சிறைச்சாலைகளில் சாதிய ரீதியில் பணி ஒதுக்கீடு - உச்ச நீதிமன்றம் கண்டனம்

சிறைச்சாலைகளில் கழிப்பறை சுத்தம் செய்யும் பணியைக் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே ஒதுக்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 

Oct 3, 2024 - 19:21
சிறைச்சாலைகளில் சாதிய ரீதியில் பணி ஒதுக்கீடு - உச்ச நீதிமன்றம் கண்டனம்
supreme court

சிறைச்சாலைகளில், சாதியை அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு காட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் இயங்கும் சிறைகளில் கையேடுகளை அடிப்படையாக வைத்து, அங்கு சாதிய அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தன. இதனையடுத்து இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், சிறைகளில், குறிப்பிட்ட சமூகத்தினருக்கும், தொடர் குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கும் பணி ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டப்படுகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலச் சிறைக் கையேடுகள் சாதியப் பாகுபாட்டினை ஊக்குவிப்பதாக உள்ளன. இந்த கையேடுகளில் உள்ள சில விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. 

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று அளித்த தீர்ப்பில், சிறைகளில் சாதியப் பாகுபாடு காட்டக்கூடாது. அவ்வாறு சிறைகளில் சாதியப் பாகுபாடு காட்டப்பட்டால் அதற்கு மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும். விளிம்பு நிலையில் அல்லது அடித்தட்டு மக்களை பாகுபாட்டுடன் நடத்துவது தவறு. சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு தண்டனை குறைப்பு, சுத்தம் செய்யும் பணி, சமையல் செய்யும் பணிகளை வழங்குவதில் சாதியப் பாகுபாடு காட்டி பணிகளை ஒதுக்கி அளிக்கக் கூடாது. இனி வரும் அடுத்த 3 மாதங்களில் இம்முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இத்தீர்ப்பில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகளை ஒரு சில குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஒதுக்குவது என்பது தவறானது என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow