மதுக்கடைகளை மூடுவதில் என்ன பிரச்னை? - சீமான் கேள்வி

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுக்கடைகளைத் திறந்தது யார்? அதை மூடுவதில் என்ன பிரச்னை? என்று கேள்வியெழுப்பியுள்ளார். 

Oct 3, 2024 - 18:54
மதுக்கடைகளை மூடுவதில் என்ன பிரச்னை? - சீமான் கேள்வி
seeman

ம.பொ.சிவஞானம் அவர்களின் 29ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய மது ஒழிப்பு மாநாடு குறித்தும் மது ஒப்புக்கான ஆளும் அரசின் நடவடிக்கை குறித்தும் கேள்விகள் முன் வைக்கப்பட்டன. 

அதற்கு பதிலளித்த சீமான், “மாநிலங்களின் நிதி தான் மத்திய அரசின் நிதி. இந்தியாவின் நிதி வருவாயில் அதிக பங்களிப்பைச் செலுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இவ்வளவு வலிமையான மாநிலத்தில் இருந்து கொண்டு தேசிய அளவில் பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என அமைச்சர் ரகுபதி கூறியது ஏற்புடையதல்ல. மதுக்கடைகளைத் திறந்தது யார். மாநில அரசுதானே? அதை மூடுவதில் என்ன பிரச்னை? எந்தக் கோரிக்கை வைத்தாலும் அதை மத்திய அரசு தான் செய்ய முடியும் என்று கை மாற்றி விடுவதை எல்லாம் ஏற்க முடியாது” என்று தெரிவித்தார். மேலும் “தற்போதைய தமிழக முதல் அடுத்த காந்தி ஜெயந்தியில் நிச்சயம் மதுக்கடைகளை மூடுவேன் என்று கூறினார். அவர் அப்படியாக உறுதி அளித்த பிறகு எத்தனை காந்தி ஜெயந்தியை நாம் கொண்டாடி விட்டோம். இன்னமும் மதுக்கடைகள் மூடப்படவில்லை.” என்று குற்றம் சாட்டினார். 

விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மது ஒழிப்பு மாநாடு குறித்துக் கேட்டதற்கு “மதுவை ஒழிக்கும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும் என்பது மிகவும் சரியான கோரிக்கை” என்று கூறினார் சீமான். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow