இந்த 5 கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க? தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி செக்!
“இந்திய தேர்தல் ஆணையம் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட்டால், வாக்குகளை திருடித்தான் மோடி பிரதமராகி உள்ளார் என என்னால் நிரூபிக்க முடியும்” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

நேற்றையத் தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பெங்களூரு சென்ட்ரல் மக்களவை தொகுதியில் நடைப்பெற்ற தேர்தல் முறைகேடுகளை தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களை ஆதாரமாக கொண்டு விளக்கினார்.
இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பேசுப்பொருளாகியுள்ள நிலையில், இன்று பெங்களூருவில் நடைப்பெற்ற தேர்தல் முறைகேடுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார்.
ராகுல் காந்தி உரையின் விவரங்கள் பின்வருமாறு-
”2024 மக்களவைத் தேர்தலில் அரசியலமைப்பைக் காப்பாற்ற முயற்சித்தோம். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனைகளைக் கொண்டது இந்த நூல் (இந்திய அரசியலமைப்பு). ”ஒரு மனிதன், ஒரு வாக்கு" என்பதே இதன் அடித்தளம். இந்த அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு வாக்குரிமையை வழங்குகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில், பாஜக தலைவர்களும், பிரதமர் நரேந்திர மோடியும் இந்த அரசியலமைப்பைத் தாக்க முயன்றதாக” ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
”மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், பாஜக வெற்றி பெற்றது. மக்களவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றாலும், சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்தோம். ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். இந்தியா கூட்டணியின் வாக்கு சதவீதம் குறையவில்லை. அதே நேரத்தில், புதிதாக சேர்க்கப்பட்ட வாக்களர்கள் பாஜகவுக்கு வாக்களித்திருந்தனர். அப்போது தான் ஏதோ தவறு நடந்து இருப்பதை நாங்கள் உணர்ந்தோம்”
விதிகளை மாற்றியது தேர்தல் ஆணையம்:
”கர்நாடகாவில் தங்களின் கணக்கெடுப்பின்படி 15-16 மக்களவை இடங்களை உறுதியாக நாங்கள் வென்றிருக்க வேண்டும். ஆனால், 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். தாங்கள் உண்மையில் இந்த இடங்களை இழந்தோமா? என்று சந்தேகம் எழுந்தது. மின்னணு வாக்காளர் பட்டியலையும், வீடியோப் பதிவுகளையும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டபோது, அவர்கள் தர மறுத்தார்கள். பின்னர், வீடியோக்களைச் சேமிப்பது குறித்த விதிகளையும் தேர்தல் ஆணையம் மாற்றியது”.
”பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியின் முடிவுகளை, குறிப்பாக மகாதேவபுரா தொகுதியின் முடிவுகளை ஆய்வு செய்தபோது, தேர்தல் ஆணையமும் பாஜகவும் இணைந்து கர்நாடகாவை ஏமாற்றிவிட்டன என்பதை நிரூபித்துள்ளோம். மகாதேவபுரா தொகுதியில் மட்டும் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளன. அதாவது ஒவ்வொரு ஆறு வாக்குகளில் ஒன்று திருடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் மின்னணு வாக்காளர் பட்டியல் மற்றும் வீடியோப் பதிவுகளை வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. வாக்குத் திருட்டை நிரூபிக்க அதை நாங்கள் பயன்படுத்துவோம், ஒரு தொகுதியில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள பல தொகுதிகளில் நாங்கள் அதைப் பயன்படுத்துவோம். அரசியலமைப்பு மீது நான் நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளேன், எனவே தேர்தல் ஆணையம் என்னிடம் பிரமாணப் பத்திரத்தை கோரத் தேவையில்லை என்றார்” ராகுல் காந்தி.
மேலும், தேர்தல் ஆணையம் 5 கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு ராகுல் காந்தி வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
1. டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்?
2.வீடியோ ஆதாரங்களை அழிப்பது ஏன்?
3. வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடியை தேர்தல் ஆணையம் செய்வது ஏன்?
4. எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், எதிர்க்கட்சிகளை மிரட்டுவது ஏன்?
5. பாஜகவின் ஏஜண்டைப் போல தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன்?
அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருங்கள்:
மேலும் பேசிய ராகுல் காந்தி, ”தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு வேலை செய்யாமல், அது அரசியலமைப்பிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அரசியலமைப்பைத் தாக்குவதிலிருந்து தப்பிக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், மீண்டும் சிந்தியுங்கள். நாங்கள் உங்களைப் பிடிப்போம். அரசியலமைப்பை குறிவைத்தால், நாங்கள் உங்களை குறிவைப்போம்" என்று பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
”நான் என் வாழ்க்கையில் 12 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளேன், ஆனால் 2019 தேர்தலில் மட்டுமே தோல்வியுற்றேன். போலி வாக்குப்பதிவு நடந்துள்ளதாக நான் அப்போதே கூறியிருந்தேன். தேர்தல்கள் வரும் போகும், ஆனால் தேர்தல் செயல்முறையைப் பாதுகாப்பது நமது கடமை. மோடியும் தேர்தலில் வெற்றி பெறவில்லை. இன்றைய நமது பிரதமர் மக்களின் ஆதரவு இல்லாத ஒரு தலைவர். அவர்களை அதிகாரத்திலிருந்து வீழ்த்துவது மட்டுமல்ல, அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிப்பதும் இதன் நோக்கம்” என்றூ தொண்டர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரினார்.
What's Your Reaction?






