ம.பி.க்கு ரூ.25 கோடி... தமிழ்நாட்டுக்கு ரூ.10 கோடி... மத்திய அரசை சராமரியாக விமர்சித்த உதயநிதி!
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு வீரர்கள் 98 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.
சென்னை: கேலோ இந்தியா போட்டிக்காக மத்திய அரசு மத்திய பிரதேசத்துக்கு ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்கு ரூ.10 கோடிதான் ஒதுக்கியது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்றும் சட்டப்பேரவை கூடியது முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. உறுப்பினர்களின் கேள்விக்கு, அந்தந்த துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இதேபோல் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறை நிறைவேற்றிய சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களவைத் தேர்தலில் திராவிட அணி 40க்கு 40 வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. இதற்கு காரணம் முதல்வர் ஸ்டாலின்தான். முதல்வர் ஸ்டாலினின் தலைமையில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
கடந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் 12 பேர் பங்கேற்றிருந்தனர். ஆனால் இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 16 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 2,860 பேருக்கு இதுவரை ரூ.102.72 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை துவங்கிய முதல் ஆண்டில் 375 வீரர்களுக்கு ரூ.8.62கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் சென்னை திருச்சி மதுரை, கோவை ஆகிய நகரங்களில் 12 நாட்கள் நடத்தப்பட்டது. இதில் 5,630 வீரர்கள் கலந்து கொண்டனர். கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு வீரர்கள் 98 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றதாக இந்திய பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். ஆனால் மத்திய அரசு கோலோ இந்தியா போட்டிக்காக மத்திய பிரதேசத்துக்கு ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கு ரூ.10 கோடிதான் ஒதுக்கியது. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
What's Your Reaction?