அனைவருக்கும் அரசியல் பாடம் புகட்டி, வழிநடத்திய ஜெயலலிதாவை என்றும் நினைவு கூர்வோம் - இ.பி.எஸ்

2026-ஆம் ஆண்டு அதிமுகவினுடைய ஆண்டு என்பதையும் உறுதிப்படுத்துவோம்.

Feb 24, 2024 - 13:20
Feb 24, 2024 - 14:02
அனைவருக்கும் அரசியல் பாடம் புகட்டி, வழிநடத்திய ஜெயலலிதாவை என்றும் நினைவு கூர்வோம் - இ.பி.எஸ்

அனைவருக்கும் அரசியல் பாடம் புகட்டி, வழிநடத்திய அம்மா ஜெயலலிதாவை என்றும் நினைவு கூர்வோம் என இ.பி.எஸ் பதிவிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது X தளத்தில் நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ளார். அதன்படி "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் காவல் தெய்வம், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் வழிவந்த அரசியல் ஞானி, தமிழக மக்களின் பாசத்திற்குரிய அன்பு அம்மாவின் 76-ஆவது பிறந்த நாள் இன்று. ஆட்சியிலும் சரி, அரசியலிலும் சரி, எந்தவிதத்திலும் சமரசம் இல்லாமல், யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல், சமநிலையோடு, சமதர்மத்தோடு, சமூக நீதியோடு அரசாண்ட சிங்க நிகர்த் தலைவி நம் புரட்சித் தலைவி அம்மா. தன்னுடைய வாழ்வு இந்த மக்களுக்கான தவ வாழ்வு. எப்போதும் மக்களிடத்திலே அதை நிரூபிக்கின்ற விதமாக "உங்களால் நான், உங்களுக்காகவே நான்" என்று தொடர்ந்து மக்கள் முன் சூளுரை ஏற்று, அதன்படி மக்கள் பணியாற்றிய ஒப்பற்ற தலைவி நம் புரட்சித் தலைவி அம்மா. அவர் காட்டிய வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடைபோட உறுதி ஏற்போம்.

எனதருமைக் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இரவு, பகல் பாராமல் தேர்தல் பணியாற்றி, புரட்சித் தலைவி அம்மா பெற்றதைப் போன்ற மகத்தான வெற்றியை எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பெற்று, அந்த வெற்றியை புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோருக்கு வெற்றி மாலைகளாக, அவர்கள் நீடு துயில் கொள்ளும் நினைவிடங்களில் சமர்ப்பிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.

நம்மையெல்லாம் அன்புடன் அரவணைத்து, அரசியல் பாடம் சொல்லி, வழிநடத்திய நம் அன்பு அம்மாவின் பிறந்த நாளில், கழகம் காக்கவும், கழகத்தை தேர்தல்களில் மகத்தான வெற்றி பெறச் செய்திடவும், நாம் அனைவரும் அயராது உழைப்போம்! உழைப்போம்! உழைப்போம்! என்று உளமார உறுதி ஏற்போம். அதேபோல், 2026-ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆண்டு என்பதையும் உறுதிப்படுத்துவோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow