விஜய்குமாரின் 'எலக்சன்' டிரெய்லர் வெளியீடு.... மே 17-இல் ரிலீஸ்... 

உறியடி படத்தின் ஹீரோ விஜய்குமார் நடித்த 'எலக்சன்' படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 

May 12, 2024 - 15:48
விஜய்குமாரின் 'எலக்சன்' டிரெய்லர் வெளியீடு.... மே 17-இல் ரிலீஸ்... 

ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா தயாரிப்பில், விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் பி. சக்தி வேலன் வெளியிடும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் எலக்சன் பட குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது அனைவரையும் வரவேற்று பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா, "எலக்சன் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் திரைக்கதையில் முக்கியத்துவம் இருக்கும் வகையில் இயக்குநர் தமிழ் கதையை எழுதி இருந்தார். விஜய்குமார், பாவெல் நவகீதன், திலீபன், நாச்சியாள் சுகந்தி முதல் அனைத்து நடிகர்களும் தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்கி இருந்தனர். 

இந்தத் திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ராணி மற்றும் ரிச்சா ஜோஷி ஆகிய இருவருக்கும் கதையை வழிநடத்திச் செல்லும் முக்கியமான கதாபாத்திரங்களை இயக்குநர் தமிழ் அளித்திருக்கிறார். அவர்களும் இதனை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார்கள். 

எல்லோரையும் விட விஜய் குமாரும் நானும் சிறந்த நண்பர்கள். அவருக்கு சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது. இந்தப் படம் உருவாகுவதற்கு அவர் மிகப்பெரிய காரணமாக அமைந்திருக்கிறார். அவரிடம் சினிமாவைப் பற்றி ஏராளமான புது புது ஐடியாக்கள் இருக்கிறது. சினிமாவில் அனைத்து விசயங்களையும் நன்கு அறிந்தவர். அவருக்கு நன்றி சொல்வதை விட,  ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால் விஜய் இல்லையென்றால் நான் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

'எலக்சன்' ஒரு அரசியல் திரைப்படம். அரசியல் என்றால் மேம்போக்கான அரசியலை சொல்லவில்லை. இதுபோன்ற வகையிலான திரைப்படங்கள் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. நான் மிகவும் ரசித்தேன். ஆனால் இந்தத் திரைப்படம் தேர்தல் தருணத்தில் வெளியாகும் என்று நினைக்கவே இல்லை.  படத்தின் இறுதி கட்ட பணிகள் ஆறு மாதங்களுக்கு மேல் நீடித்தது. இதனைத் தொடர்ந்து சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் நல்லதொரு தேதியை தேர்வு செய்து இப்படத்தை வெளியிடுகிறார். இந்த படத்தின் மூலம் இயக்குநர் தமிழுக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.'' என்றார்.

படத்தின் நாயகன் விஜய்குமார் பேசுகையில்,  உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் திரைப்படம் இது. களம் தேர்தலாக இருந்தாலும் கருத்துக்களை வலிந்து திணிக்காமல்,  அரசியலை அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்தி, உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு ஃபேமிலி டிராமாவாகத்தான் இந்த படம் தயாராகி இருக்கிறது. படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் பிரசாரம் செய்வார்கள். ஆனால் படம் எந்த பிரசாரத்தையும் செய்யவில்லை. இந்தப் படத்தின் முதுகெலும்பு, பற்றி சொல்ல வேண்டும் என்றால் நடிகர் ஜார்ஜ் மரியம் ஏற்று நடித்திருக்கும் நல்ல சிவம் என்ற ஒரு அரசியல் கட்சி தொண்டரை தான் சொல்ல வேண்டும். கட்சி தொண்டன் என்றால் தன்னலம் பார்க்காமல்  மக்களுக்காகவும், கட்சிக்காகவும் கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு கேரக்டர். நம்மில் பெரும்பாலானவர்கள் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை நம் குடும்பத்திலேயே பார்த்திருப்போம். 'அமாவாசை' போன்றவர்கள் இருக்கும் அரசியலில் இப்படி கொள்கைக்காகவும், கட்சிக்காகவும் உழைக்கிற நல்லவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி ஒரு கதாபாத்திரம் பற்றிய கதை இது. இப்படி இருப்பவர்களை ஏமாளியாகவும், பிழைக்கத் தெரியாதவர்களாகவும் இந்த உலகம் பேசும் போது.. அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும், அவருடைய மகனுக்கும் ஒரு நியாயமான கோபம் இருக்கும். அப்படி ஒரு மகன் கதாபாத்திரத்தில் தான் நான் நடித்திருக்கிறேன். படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் தமிழ் பேசுகையில், '' புகழ், பணம், போதை, பெண் இதற்காக நான் சினிமாவிற்கு வரவில்லை. என்னை அழ வைத்ததையும், என்னை சிந்திக்க வைத்ததையும் சொல்வதற்காகவே சினிமாவிற்கு வந்தேன்.  எனக்கு கதை சொல்லத் தெரியாது. அதனால்தான் படத்தின் திரைக்கதையை எழுதி தயாரிப்பாளரிடம் கொடுத்து விடுவேன். ஆனால் விஜய்குமார் இப்படத்தின் திரைக்கதையை முழுவதுமாக வாசித்து விட்டார். அவர் இயக்குநர் என்பதால்  இப்படத்தின் கதையைப் பற்றி அந்த தயாரிப்பாளரிடம் நிறைய எடுத்து சொல்லி இருக்கிறார்.  இருந்தாலும் தயாரிப்பாளர் கதையை சொல்லுங்கள் என கேட்டுக்கொண்டார். விருப்பமில்லாமல் அவரிடம் ஒரு மணி நேரம் கதையை சொன்னேன். நிச்சயமாக அவரிடம் என்ன கதை சொன்னேன் என்று இன்று வரை எனக்கு தெரியாது. ஆனால் தயாரிப்பாளர் ஆதித்யாவை விஜய் குமார் விளக்கமாக எடுத்துச் சொல்லி அவரை சம்மதிக்க வைத்து விட்டார்.  எனவே இந்தத் திரைப்படம் தயாராவதற்கும், நான் இந்த மேடையில் இயக்குநராக நிற்பதற்கும் முழு காரணம் விஜய்குமார் மட்டும்தான்.  இதனை நான் நேர்மையாகவும் உண்மையாகவும் இங்கு பதிவு செய்கிறேன்.  இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow