தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி.. எப்போது தெரியுமா?..
தருமபுரம் ஆதீனத்தில் வரும் 30-ம் தேதி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைவ மடங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனம் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது. இதனை குருஞான சம்பந்தர் நிறுவினார். தற்போது தருபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 20-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.
இந்த மடத்தில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் உள்ளது. ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 11 நாட்கள் பெருவிழா நடைபெறுவது வழக்கம். முதல் 10 நாட்கள் திருக்கல்யாணம், தேரோட்டம், தீர்த்தவாரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடர்ந்து 11-ம் நாள் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பல்லக்கில் அமர்ந்து வீதியுலா செல்லும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த நிலையில், இந்தாண்டு தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழாவிற்காக வரும் 20-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது. தொடர்ந்து விழாவின் 11-ம் நாளான மே 30-ஆம் தேதி (வைகாசி 7) பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியின்போது, மனிதனை மனிதன் சுமப்பதா? என திராவிடர் கழகம், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது அந்த விழாவிற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. பிறகு தடை விலக்கப்பட்டு கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?