நீர்த்தேக்க தொட்டிக்கு தனிநபர் எதிர்ப்பு... காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்...
குளித்தலை அருகே தனது இடம் என்று கூறி நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணிக்கு முட்டுக்கட்டை போடுபவரைக் கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே போத்துராவுத்தன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடுகபட்டியில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமீர்ராஜ் என்பவர் அந்த இடம் தனக்கு சொந்தமானது என்று கூறி நீர்த்தேக்க தொட்டி கட்டவிடாமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்டபவர்களை அமீர்ராஜ் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமீர்ராஜ் செயலைக் கண்டித்தும், நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் காலி குடங்களுடன் குளித்தலை - பஞ்சப்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தோகைமலை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து விசாரணைக்காக அமீர்ராஜை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
What's Your Reaction?