சிவகாசி பட்டாசு ஆலையில் மீண்டும் வெடிவிபத்து.. இடிந்து தரைமட்டமான 3 அறைகள்

May 11, 2024 - 11:54
சிவகாசி பட்டாசு ஆலையில் மீண்டும் வெடிவிபத்து.. இடிந்து தரைமட்டமான 3 அறைகள்

சிவகாசி அருகே மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 3 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் ராஜாராம் என்பவருக்கு சொந்தமாக மகேஷ்வரி என்ற பெயரில்  பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆலையில் மருந்துக் கலவை செய்யும் அறையில் இன்று ( மே 11) திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 3 அறைகள் தரைமட்டமாகின. பட்டாசு ஆலை தொழிலாளர்கள் பணிக்கு வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிவகாசி தீயணைப்புத் துறை வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மருந்து கலவை செய்யும் அறையில் நேற்று பணி முடிந்த பின்னர் மீதி மருந்துகளை வைத்துவிட்டுச் சென்றதால், அதிக உஷ்ணம் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமத்துடன் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

நேற்று முன்தினம் (மே 9) செங்கமலப்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை விபத்து ஏற்பட்டு 10 உயிரிழந்தனர். இந்த விபத்தின் சூடு அடங்குவதற்குள் சிவகாசி அருகே மீண்டும் ஒரு பட்டாசு ஆலை விபத்து ஏற்பட்டு இருப்பது பொதுமக்கள் மற்றும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இனிமேலும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாத வகையில், பட்டாசு ஆலைகளில் தீவிரமாக சோதனை நடத்தி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow