கொதிக்கும் கோடை வெப்பம்.. தமிழ்நாட்டில் வெப்ப அலை.. தெலுங்கானாவிற்கு மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை மையம்

வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெலங்கானாவில் கோடை வெயில் 110 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.

Apr 6, 2024 - 17:44
கொதிக்கும் கோடை வெப்பம்.. தமிழ்நாட்டில் வெப்ப அலை.. தெலுங்கானாவிற்கு மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை மையம்

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரத்திற்கு முன்பாகவே அனலடிக்க ஆரம்பித்து விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் 40 டிகிரி செல்கியஸ் (100 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும். ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம். 

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 41.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் அதிகபட்ச வெப்பம் 41.2 டிகிரி செல்சியஸ், சேலத்தியில் 41.26 டிகிரி செல்சியஸ், தருமபுரியில்  41.0 டிகிரி செல்சியஸ் , மதுரை நகரம் மற்றும்  விமான நிலையம், நாமக்கல், திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர்   40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. 

கோயம்புத்தூர், திருத்தணி, மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.  கடலோரப் பகுதிகளில் 34 டிகிரி – 37டிகிரி செல்சியஸ், மலைப்பகுதிகளில் 23 டிகிரி – 30டிகிரி  செல்சியஸ்  பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 34.7 டிகிரி செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 35.8 டிகிரி  செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் தெலங்கானா மாநிலத்தில் பல பகுதிகளில் 105 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. தெலங்கானாவில் அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸை (109.4 டிகிரி பாரன்ஹீட்) தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. பகல் நேரங்களில் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசும் எச்சரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடும் வெயில் சுட்டெரிப்பதால், 14 பெரிய மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வசதியாக குளிர்சாதன வசதி கொண்ட அறைகளை ஏற்பாடு செய்யும்படியும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
ஏப்ரல், மே மாதங்களில் கடந்த காலங்களை காட்டிலும் இந்தாண்டு வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், வெயில் தாக்கத்தில் இருந்து விடுபட முன்னெச்சரிக்கை விழிப்புணர்வை உள்ளாட்சி அமைப்புகள் எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

கோடை காலம் முடியும் வரைக்கும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். மது, தேநீர், காபி மற்றும் செயற்கை குளிர்பானங்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow