சென்னையில் கார் ஓட்டுநரிடம் நூதன மோசடி- விபூதி அடித்த போலி டாக்டருக்கு போலீஸ் வலை

கடந்த 2023 ஆம் ஆண்டு கார் ஓட்டுநர் தினேஷ் குமார் என்பவரிடம் இதைபோல சஞ்சய் வர்மா ஏமாற்றி இருந்ததும் அப்போது கைதாகி சிறைக்கு சென்று வந்தவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Oct 10, 2024 - 16:18
சென்னையில் கார் ஓட்டுநரிடம் நூதன மோசடி- விபூதி அடித்த போலி டாக்டருக்கு போலீஸ் வலை

சென்னையில் கார் ஓட்டுநரிடம் கள்ளநோட்டுகளை கொடுத்து நூதன மோசடியில் ஈடுபட்ட போலி டாக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம்,  திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் சென்னையில் கால் டாக்ஸி ஓட்டி வருகிறார். இவருக்கு நண்பர் ஒருவரின் மூலம் சவாரி ஒன்று கிடைத்தது. அந்த நபர் தன்னை டாக்டர் என அறிமுகப்படுத்தி கொண்டார். வடபழனி விஜயா மருத்துவமனையில் இருந்து மகாபலிபுரம் செல்ல வேண்டும் என்று புக்கிங் செய்தார். இதையடுத்து கோவிந்தராஜ் அந்த நபரை காரில் ஏற்றினார். கார் சிறிது தூரம் சென்றதும் சாப்பிடலாம் என கூறி காரை நிறுத்த வைத்தார். பிறகு வடபழனியில் உள்ள மவுரியா இண்டர்நேஷனல் ஓட்டலுக்கு சென்றார். 

சாப்பிட்டு வந்த அந்த நபர் தன்னிடம் பணம் இருக்கிறது, ஜிபே மூலம் ரூ. 7 ஆயிரம் அனுப்பும் படி கேட்டுள்ளார். கார் ஓட்டுநர் கோவிந்தராஜ் ஜிபே மூலம் ரூ. 7 ஆயிரம் அனுப்பி அவரிடம் இருந்த பணத்தை வாங்கி கொண்டார்.பிறகு செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி விட்டது என கூறி கார் ஓட்டுநர் கோவிந்தராஜின் செல்போனை வாங்கி பேசினார். கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபர் செல்போனோடு அங்கிருந்து ஓடி விட்டார். அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் அவர் கொடுத்த பணத்தை பார்த்த போது அது கள்ளநோட்டு என்பதும், சினிமாவில் பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகள் என்பது தெரிய வந்தது. தான் ஏமாற்றப்பட்டது குறித்து கோவிந்தராஜ் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

போலீசார் விசாரணை நடத்தியதில் கார் புக்கிங் செய்து மோசடியில் ஈடுபட்டவர் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சஞ்சய் வர்மா என்பது தெரிய வந்தது. இவர் மீது கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கனவே மோசடி வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு கார் ஓட்டுநர் தினேஷ் குமார் என்பவரிடம் இதைபோல சஞ்சய் வர்மா ஏமாற்றி இருந்ததும் அப்போது கைதாகி சிறைக்கு சென்று வந்தவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமறைவான சஞ்சய் வர்மாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow