5 மாநிலங்களில் விசிக போட்டி.. பானை சின்னத்தை ஒதுக்க மனு.. திருமா-வின் குயிக் மூவ்..

Feb 20, 2024 - 15:43
5 மாநிலங்களில் விசிக போட்டி.. பானை சின்னத்தை ஒதுக்க மனு.. திருமா-வின் குயிக் மூவ்..

மக்களவைத் தேர்தலில் விசிக 5 மாநிலங்களில் போட்டியிடவுள்ளதாகவும், பானை சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் பானை சின்னத்திலும், ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. 6 சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 4 தொகுதியில் வெற்றி பெற்றனர். இரண்டு தேர்தலில் தனி சின்னமான பானை சின்னத்தில் போட்டியிட்டு குறுகிய காலத்தில் மக்களிடம் சின்னம் குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில் திமுக கூட்டணி அங்கம் வகிக்கும் விசிக, இந்தியா கூட்டணியில் விரைவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறது. திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையில், டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் விசிகவுக்கு பொதுச் சின்னம் ஒதுக்க வலியுறுத்தி திருமாவளவன் நேரில் சென்று இன்று (பிப். 20) மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் விசிக சார்பில் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாகவும், விசிகவுக்கு சுயேட்சை சின்னத்தில் இருந்து பானை சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார். முன்னாள் குடியரசுத் தலைவரும், ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுத் தலைவருமான ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து, ஒரே தேர்தல் என்பது அதிபர் ஆட்சிக்கு வழிவகுக்கும் என்றும், அதனைக் கைவிட வேண்டும் எனவும் விசிக சார்பில் கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம் எனத் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow