வேளான் பட்ஜெட்: மண்ணும் செழித்தது; மக்களும் செழித்தார்கள்! - முதலமைச்சர்
உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டியிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "நான்காவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையானது இயற்கை வளத்தை மேம்படுத்திக் காட்டும் ஈடு இணையற்ற அறிக்கையாக அமைந்துள்ளது. மொழிக்கு இலக்கணம் வகுத்ததுபோல நிலத்துக்கும், மண்ணுக்கும் இலக்கணம் வகுத்த நம் முன்னோர் வழியில் நாம் செயல்பட்டு வருகிறோம் என்பதற்கு அழுத்தமான சாட்சியமாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
மண் வளம் பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கவும் உயிர் வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செயல்முறைகளையும் ஊக்கப்படுத்திட 'முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்' அமைந்துள்ளது. இராசயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணியிர்களின் எண்ணிக்கை குறைந்து மண் வளம் குறைந்து வருகிறது. எனவே மண் வளத்தை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. நெற்பயிரில் இரசாயன மருந்துகளைக் குறைத்தலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இயற்கைச் சீற்றங்களால் உழவர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பில் இருந்து அவர்களை மீட்கப் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு அந்தத் திட்டத்துக்கு மட்டும் ரூ.1,775 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிராமம் ஒரு பயிர்' என்ற திட்டம்15 ஆயிரத்து 280 கிராமங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது. 10 ஆண்டுகளாகப் பாசன மின் இணைப்புக்கான விண்ணப்பங்களை அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு வைத்திருந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் பேருக்கு இலவச மின் இணைப்புகளை கழக அரசு வழங்கி உள்ளது. இந்த ஆண்டில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க இருக்கிறோம். நெல்லுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு 215 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
பசிப்பிணி போக்கும் மருத்துவர்களாம் வேளாண் பெருமக்களது கோரிக்கைகளுக்குச் செவிமடுக்கக்கூட மனமில்லாத வகையில் ஒன்றிய அரசு உள்ளது. உழவர்களைத் தடுக்கச் சாலைகளில் ஆணியைப் புதைக்கும் அரசாக பா.ஜ.க. அரசு உள்ளது. அதேநேரத்தில் உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டி வழங்கும் அரசாகத் தி.மு.க. அரசு உள்ளது. இதன் மூலமாக உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறோம் என்பதை அனைவரும் அறியலாம். மண்ணையும் காப்போம்! மக்களையும் காப்போம்! மண்ணையும் வளர்த்து, மக்களையும் வாழ்விப்போம்!" என குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?