தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல் வழக்கு.. எழும்பூர் கோர்ட்டில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி.. கூடிய கூட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு, வரும் ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

May 14, 2024 - 13:23
தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல் வழக்கு.. எழும்பூர் கோர்ட்டில் ஆஜரான  எடப்பாடி பழனிசாமி.. கூடிய கூட்டம்

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முன்னதாக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், தங்களது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட புரசைவாக்கம் அருகேயுள்ள தாணா தெருவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பேசினார். அப்போது, மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி.யான  தயாநிதி மாறன், சொந்த நலனுக்காக போட்டிடுவதாகவும், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீத தொகையை செலவு செய்யவே இல்லை என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்நிலையில், உண்மை தன்மையை ஆராயாமல், தொகுதி மக்களிடையே தனக்கு இருக்கும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துகளை பேசியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி மீது திமுக எம்.பி. தயாநிதி மாறன் கூறியிருந்தார். மேலும், 24 மணி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்காத நிலையில், சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், தயாநிதி மாறன் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில், நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியாக வழங்கப்பட்ட 17 கோடி நிதியில், 17 லட்சம் மட்டும் தான் மீதம் உள்ளது என்றும், தொகுதிக்காக 95 சதவீதத்திற்கும் மேலான நிதியை செலவு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தன் மீது அவதூறு பரப்பிய எடப்பாடி பழனிசாமி மீது, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500ன் கீழ் அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.  

இந்த வழக்கு செவ்வாய்க்கிழமையான இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் எழும்பூர் நீதிமன்றத்திற்கு வரப்போகிறார் என்ற தகவல் பரவிய உடனேயே கூட்டம் அதிகரித்தது. இதனையடுத்து அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், வழக்கை வரும் ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow