கச்சத்தீவை தாரை வார்த்தது கருணாநிதியா? ஆவணங்கள் சொல்வது என்ன? இன்று வரை பிரச்னை ஏன்?
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நம்பிக்கையை பெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியே கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க ஒப்புக் கொண்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருப்பது தேர்தல் களத்தில் சூட்டை கிளப்பியிருக்கிறது. தமிழ்நாட்டின் நலனை காக்க திமுகவும், கருணாநிதியும் இதுவரை ஒன்றும் செய்யவில்லை என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நூறாண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் பேசப்படும் இந்த கச்சத்தீவு, உண்மையில் 300 மீட்டர் அகலம், 1.6 கி.மீ நீளம் மட்டுமே கொண்ட சிறிய தீவு தான். மனிதர்கள் யாரும் வசிக்காத அந்த தீவில் புனித அந்தோணியார் தேவாலயம் மட்டும் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரியில் நடைபெறும் விழாவில் இந்திய - இலங்கை மக்கள் ஒன்றாக பங்கேற்று வருகின்றனர்.
1974ம் ஆண்டு இந்தியப் பிரதமராக இந்திராகாந்தியும், இலங்கை பிரதமராக சிறிமாவோவும் தமிழ்நாடு முதலமைச்சராக கருணாநிதியும் இருந்தபோது, இந்திய - இலங்கை அரசு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில் சென்றது. இப்பிரச்னை, 2024 மக்களவைத் தேர்தலையொட்டி மீண்டும் பூதாகரமாகியுள்ளது. கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட ஆவணங்களை தமிழ்நாடு பாஜக தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை வெளியிட்டார். அதன்படி, கச்சத்தீவு உரிமையை விட்டுக்கொடுப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என பிரதமர் நேரு கூறியதும், இலங்கை சீனாவின் பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்பன உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியா இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது. இதனை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, எந்த அனுமதியும் இன்றி கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் வழங்கியதாகவும் அக்கட்சியை ஒருபோதும் நம்பக் கூடாது என்பதற்கு இதுவே சான்று எனவும் குற்றம்சாட்டினார்.
மீண்டும் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக விமர்சித்துள்ள அவர், தனியார் செய்தி நிறுவனத்தின் சுட்டியையும் அதில் இணைத்துள்ளார். அச்சுட்டியின்படி, 1974ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு ஒப்பந்த மசோதா முன்மொழியப்பட்டது. அப்போது, எந்த விதிகளையும் மதிக்காமல் தங்களை முழுமையாக சரணடையச் செய்யும் இழிவான செயல் எனக்கூறி அவையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக திமுக எம்.பி செழியன் கொதித்தெழுந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே 1974ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளர் கேவல் சிங்குடன் தலைமை செயலாளர் சபாநாயகம், உள்துறை செயலாளர் அம்புரோசுடன் கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது. அப்போது மத்திய - மாநில பிரச்னையாக இது மாறக்கூடாது எனக்கூறி இலங்கையுடனான பேச்சுவார்த்தையின் முழு சாராம்சத்தையும் கேவல்சிங் விளக்கியதாகவும், இதைத்தொடர்ந்து, பரிந்துரைக்கப்பட்ட தீர்வை கருணாநிதி ஏற்றுக்கொண்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திரா காந்தியின் நம்பிக்கையைப் பெற்ற முதலமைச்சராக கருணாநிதி, இதனை செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியின் சுட்டியை, தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பேச்சுவார்த்தைகள் எனக் கூறி தமிழ்நாட்டின் நலன் காக்க திமுக எதுவும் செய்யவில்லை எனவும், கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரசும் - திமுகவும் தங்கள் சொந்த குடும்ப நலன்கள் தொடர்பாக மட்டுமே கவலைப்படுவதாகவும், கச்சத்தீவு உண்மைகள் அக்கட்சிகளின் அடாவடித்தனத்தை வெளிப்படுத்தியதால் ஏழை மீனவர்கள்-பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மத்தியில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக எதுவும் செய்யாமல், மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் விமர்சிப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருக்கிறது. அதேநேரத்தில், பத்தாண்டுகளாக கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காக திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம் - தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்ததை முதலில் கூறுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?