'குடிங்க... ஆனா அளவா குடிங்க'... கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்ற கமல்ஹாசன் அட்வைஸ்!
கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்த கமல்ஹாசன் அவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
சென்னை: தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடினால் மட்டும் எல்லாம் சரியாகி விடாது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி என்பவர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த பலர் இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.
இதை குடித்த பலர் கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். மேலும் சிலர் மயங்கி விழுந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பலர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 57 இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், கள்ளச்சாராயத்துக்கு 57 பேர் உயிரிழந்தது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்துக்கு 'எக்ஸ்' தளம் மூலம் இரங்கல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், கமல்ஹாசன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்றார்.
கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்த அவர் அவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:-
மதுக்கடைகளை மூடினால் மட்டும் எல்லாம் சரியாகி விடும் என்று கூறுவது தவறான கருத்து. சாலை விபத்து நடைபெறும் என்பதால் போக்குவரத்தை நிறுத்தி விட முடியாது. குடிக்காதே என்று சொல்ல முடியாது; அளவாய் குடியுங்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
மதுக்கடைகள் மூலம் வருமானம் ஈட்டும் எந்த அரசும், அதை திரும்பவும் மக்களுக்கு போய்சேரும் ஒரு நற்பயனை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மருந்து கடைகளை விட டாஸ்மாக் கடைகள் அதிகமாக உள்ளன.
விஷ சாராயம், கள்ளச்சாரயம், மது உள்ளிட்டவை ஆபத்து என்பதை மக்களின் மனதில்படும்படி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மதுக்கடைகளுக்கு அருகிலேயே, அதிகமாக குடித்தால் ஏற்படும் ஆபத்து குறித்த விழிப்புணர்வு மையங்களை அமைக்க வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.
What's Your Reaction?