வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா.. அமோக விளைச்சல்.. விலையில்லையே.. விவசாயிகள் சோகம்
6 மாதங்களுக்கு முன்னரே விவசாயிகள் சாகுபடி செய்ய துவங்கிய நிலையில் மிக குறுகிய காலத்தில் விளைச்சல் அதிகரித்துள்ளது.
வெள்ளரிக்காய் அதிகமாக விளைந்தும் விளைச்சல் இல்லாத காரணத்தால் நாகை மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கோடை வந்துவிட்டாலே மக்கள் சூட்டை தணிப்பதற்காக இயற்கை தந்த வரபிரசாதங்களான தர்பூசணி, வெள்ளரி, முலாம் பழம் போன்றவற்றை தேடி செல்வது வழக்கமான விசயமாகும். எப்போதும் போல் இந்த ஆண்டும் கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் வெள்ளரி சாகுபடியும் விற்பனையும் இருமடங்காக உயர்ந்துள்ளது. காவிரி டெல்டாவின் கடைமடை மாவட்டமான நாகையில் மணற்பாங்கான கடற்கரையோர பகுதிகளில் நஞ்சை மற்றும் புஞ்சை சாகுபடி இல்லாத சூழலில், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பணப்பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நாகை மாவட்டத்தில் வடக்கு பொய்கைநல்லூர், தெற்கு பொய்கைநல்லூர், காமேஸ்வரம், விழுந்தமாவடி, நாலு வேதபதி, வேதாரண்யம், உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளரி சாகுபடி களைகட்டியுள்ளது. குறிப்பாக 6 மாதங்களுக்கு முன்னரே விவசாயிகள் சாகுபடி செய்ய துவங்கிய நிலையில் மிக குறுகிய காலத்தில் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்தாண்டை விட அதிகப்படியான விளைச்சலை கண்டுள்ள வெள்ளரி ஒரு கிலோ 30 லிருந்து 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஒருபுறம் விளைச்சல் அதிகமாக இருந்தாலும், மறுபுறம் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, உர செலவு அதிகரிப்பு, போன்றவற்றால் விவசாயிகள் வாடி வரும் சூழலில் விலை வீழ்ச்சி அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் உரிய நடவடிக்கை எடுத்து அரசு உதவி செய்திட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
What's Your Reaction?