ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த எது தடுக்கிறது? முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாசு கேள்வி
ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த எது தடுக்கிறது என முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாசு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வலியுறுத்தி பாமக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசு தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமதாசு பேசியதாவது: "இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது, வன்னியர்கள் மட்டுமல்ல அனைத்து சமுதாயங்களும் வளர வேண்டும்.
ஒவ்வொரு சமுதாயத்திலும் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இட ஒதுக்கீடு சரியாக பங்கிடப்பட வேண்டும். மக்கள் நலமாக வாழ ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எளிதுதான்.
இடஒதுக்கீடு கொடுத்தால் நன்மைதானே கிடைக்கும், அரசுக்கு பெயர்தானே கிடைக்கும். தமிழ்நாடுதான் இந்தியாவுக்கே வழிகாட்டி என பெருமையாக சொல்கிறோம். சமூக நீதியின் பிறப்பிடம் தமிழ்நாடுதான். 324 சமுதாயத்துக்கும் சரியாக இடஒதுக்கீடு பெற்றுத் தந்தால் அந்த பெருமை முதலமைச்சர் ஸ்டாலினுக்குதான் சென்று சேரும்.
இடஒதுக்கீடு கொடுத்தால் ஆளும் கட்சிக்குதானே நன்மை, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த எது தடுக்கிறது?. இடஒதுக்கீடு தந்தால் அந்தந்த சமுதாய மக்கள் முன்னேறுவார்கள். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாற்றை படைக்க வேண்டும்."இவ்வாறு தெரிவித்தார்.
What's Your Reaction?

