'சட்டப்பேரவையில் நான் பேசியிருந்தால்...' துரைமுருகனுக்கு 'நச்' பதில் சொன்ன எடப்பாடி!
''ஆணவத்தோடு செயல்பட வேண்டாம் என திமுவினரை கேட்டுக் கொள்கிறேன்.ஏனெனில் ஆட்சி அதிகார சக்கரம் சுற்றிக்கொண்டுதான் வரும். அதிமுக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும் என்பதை மறந்து விட வேண்டாம்.''
சென்னை: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 64 பேர் பலியாகி விட்டனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும், இதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதற்கிடையே தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 20ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. சட்டப்பேரவை நடக்கும் நாளில் எல்லாம் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவதும் சபாநாயகர் அவர்களை வெளியேற்றுவதும் தொடர்ந்தது.
இந்நிலையில், நேற்றும் கறுப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக உறுப்பினர்கள், கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என தொடர் அமளியில் ஈடுபட்டனர். அதன்பிறகு அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சட்டப்பேரவையின் மாண்பை சீர்குலைத்ததாக கூறி நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னையில் இன்று அதிமுக உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த இந்த போராட்டத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
அவரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் கறுப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அதிமுகவின் போராட்டத்துக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேரில் வந்து வந்து ஆதரவு தெரிவித்தார். இதேபோல் நாம் தமிழர் கட்சியின் சீமானும் அதிமுகவின் போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், உண்ணாவிரத போராட்ட களத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். திராவிட மாடல் ஆட்சியின் அலட்சியத்தால் கள்ளக்குறிச்சி கண்ணீரில் மிதக்கிறது.
இந்தியாவையே உலுக்கிய இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் ஏன் விவாதிக்க மறுக்கிறீர்கள்? கள்ளக்குறிச்சியில் உயிரிழப்பு குறித்து விவாதிக்க கோரினால், வேண்டுமென்றே எங்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றி சஸ்பெண்ட் செய்து விட்டார்கள்.
திமுக 40க்கு 40 தொகுதிகளில் வென்றது அதிமுகவினர் கண்களை உறுத்துகிறது என்று ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் பேசுகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஆணவத்தில், மமதையில் திமுவினர் பேசுகின்றனர். ஆணவத்தோடு செயல்பட வேண்டாம் என திமுவினரை கேட்டுக் கொள்கிறேன்.
ஏனெனில் ஆட்சி அதிகார சக்கரம் சுற்றிக்கொண்டுதான் வரும். அதிமுக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும் என்பதை மறந்து விட வேண்டாம். அதிமுக போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், சீமான் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது செய்தியாளர்கள் ''அதிமுக சட்டப்பேரவையில் இருந்திருந்தால் முதல்வர் ஸ்டாலின் அதிமுகவினரின் குற்றங்களை பட்டியலிட்டு கிழி கிழி என கிழித்திருப்பார்'' என அமைச்சர் துரைமுருகன் பேசியது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த எடப்பாடி, ''சட்டப்பேரவையில் நான் பேசுவதை ஒளிபரப்பு செய்திருந்தால் ஆளும் கட்சியை கிழி கிழி என கிழித்திருப்பேன்'' என்று கூறினார்.
What's Your Reaction?