கூட்டணியை இறுதிசெய்வதில் தள்ளாடுகிறது திமுக?.. இழுபறிக்கு என்ன காரணம்?

Feb 27, 2024 - 16:13
Feb 27, 2024 - 16:16
கூட்டணியை இறுதிசெய்வதில் தள்ளாடுகிறது திமுக?.. இழுபறிக்கு என்ன காரணம்?
திமுக கூட்டணி கட்சி தலைவர்கள்

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக, மக்களவை தேர்தல் கூட்டணியை இறுதி செய்வதில் சற்று தடுமாறி வருவதாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம், சென்ற முறையை விட திமுக கூட்டணி கட்சிகள் அனைத்துமே அதிக இடங்களை எதிர்பார்ப்பது தான். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த இந்திய ஜனநாயகக் கட்சிக்குப் பதிலாக, தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றுள்ளது. அதைத் தவிர திமுக கூட்டணியில் மாற்றங்கள் இல்லை. 

தற்போது வரை, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்தியன் முஸ்லீம் லீக்கிற்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கீடு செய்துள்ளது திமுக. ஆனால், மற்ற கட்சிகளுடனான பேச்சுவார்த்தை இழுப்பறியில் தான் உள்ளது. 

பிரதான கூட்டணி கட்சிகளுள் ஒன்றான காங்கிரஸ் கட்சி, கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் 9 இடங்களிலும், புதுச்சேரியில் ஒரு இடத்திலும் போட்டியிட்டு இருந்தது. இம்முறை கூடுதலாக 2-3 தொகுதிகளை தமிழ்நாட்டில் பெற காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. அதனாலேயே கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு திமுக- காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கேவே நேரடியாக தமிழ்நாடு வந்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து எந்த அறிவிப்பும் அதன்பிறகு வெளியாகவில்லை. 

கடந்த முறை திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக, சிதம்பரத்தில் பானைச் சின்னத்திலும் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டது. இம்முறை, தன் சொந்த சின்னத்திலேயே போட்டியிட முடிவு செய்துள்ள விசிக, திருச்சி மாநாட்டிற்கு பிறகு கூடுதல் தொகுதிகளை டிமாண்ட் செய்வதாக கூறப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளை பொறுத்தவரை பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், மார்ச் மாதம் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

திமுக கூட்டணியில் மதிமுக-வும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், புதிதாக இணைந்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் நிலை என்னவென்ற கேள்வியும் எழுந்துள்ளது. காங்கிரஸுடனான தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படும் அன்றே மக்கள் நீதி மய்யம் தொகுதி பங்கீடு குறித்த தகவல்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவையும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடங்களை எதிர்பார்க்கின்றன. 

கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டில் பொறுமை  காக்கும் திமுக, கூட்டணி கட்சிகள் கேட்கும் சில தொகுதிகளை தங்கள் வேட்பாளர்களையே நிற்க வைக்க முனைப்பு காட்டுவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow