எந்த பக்கம் சாய்வது... அதிமுகவா? பாஜகவா? குழப்பத்தில் பாமக, தேமுதிக!
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் கூட்டணியை அமைப்பதில் திராவிட கட்சிகள் திணறி வரும் நிலையில், அண்மையில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால் நான்கு முனைப் போட்டி உருவாகும் சூழல் உருவாகியிருக்கிறது.
பாஜக மட்டும், முதல் கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் உறுதி செய்திருக்கிறது. ஓபிஎஸ் ஆதரவும் பாஜகவிற்கு இருப்பதால், டிடிவியும் பாஜகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதேபோல், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக் கட்சி, ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்திருக்கிறது.
சிறு கட்சிகள் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்திருந்தாலும், பாமக மற்றும் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதில் மட்டும் தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கிய கேள்வியாக இருக்கிறது.
அதிமுகவை பொறுத்தவரை, பாமகவுடன் தீவிர பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. தேமுதிகவின் எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதால் அதிமுகவிற்கு மிகப்பெரிய சிக்கலாகத்தான் அமைந்துள்ளது. விஜயகாந்தின் மறைவிற்கு பிற கிடைக்கவிருக்கும் அனுதாப வாக்குகளை நம்பியுள்ள தேமுதிக, இம்முறை நிறைய தொகுதிகளில் போட்டியிட விருப்பம் காட்டுகிறது. அதனால், அதிமுக – பாஜக இரு கட்சிகளில் யார் அதிக இடங்களை தருகிறார்களோ அவர்களுடனே கூட்டணி அமைக்க பிரேமலதா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ராஜ்யசபா சீட் வேண்டுமென்ற பிடிவாதத்தில் இருப்பதால், அதை அதிமுக தீவிரமாக யோசித்து வருகிறது.
தேமுதிகவை போலவே, பாமகவும் அதிக தொகுதிகளை கேட்பதாக தகவல் கசிந்து வருகிறது. இதனால், பாஜகவா? அதிமுகவா? என்ற குழப்பத்தில் பாமக இருக்கிறது. அதிமுக – பாஜக இரண்டு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், கூடிய விரைவில் கூட்டணி பங்கீடு உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?