கள்ள ஓட்டுப்போட்ட திமுக ரவுடிகள்... மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் - தமிழிசை புகார் மனு...
தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாகவும் அதனால் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனவும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் நேற்று மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், சில தொகுதிகளில் வாக்காளர்கள் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், தென்சென்னை மக்களவைத் தொகுதி தேர்தலில் பல்வேறு குளறுபடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன், "தேர்தல் நேர்மறையாக நடைபெற்று, அதன் மூலம் நேர்மையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் நடைமுறை. ஆனால், திமுகவிற்கு எப்போது எல்லாம் தோல்வி பயம் வருகிறதோ, அப்போது எல்லாம் அவர்கள் மாற்றுப்பாதையை கடைபிடிப்பது வழக்கம். அந்த வகையில் மயிலாப்பூர் 13-வது வாக்குச்சாவடியில் திமுகவைச் சேர்ந்த 50 பேர் புகுந்து பாஜக பூத் ஏஜெண்டுகளை அடித்துத் துரத்திவிட்டு கள்ள ஓட்டு போட முயன்றனர். அதனால், அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். மேலும், சாலிகிராமம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் கள்ள ஓட்டுப் போட முயன்றதை பாஜகவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். திமுக இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபடக் கூடாது என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், சில இடங்களில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வாக்காளர்கள் பெயர்கள் விடுபடாமல் கவனத்தில் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை தேர்தல் வைப்பதால் 2 நாட்கள் கூடுதல் விடுமுறை கிடைப்பதாக கருதி மக்கள் வாக்களிக்க வருவதில்லை. அதனால், திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தேர்தல் நடத்துவதை தவிர்க்க வேண்டும். 100% வாக்கு அளிப்பதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்தும் பயனில்லை என்பதை சென்னை வாக்குப்பதிவு நிலவரம் காட்டுகிறது" எனக் கூறினார்.
What's Your Reaction?