கள்ளக்குறிச்சியில் தலித்துகள் இறக்கிறார்கள்... ராகுல் காந்தி எங்கே?... நிர்மலா சீதாராமன் கேள்வி!

காங்கிரஸ் தமிழ்நாட்டில் தங்களது கூட்டணி கட்சியான ஆளும் திமுக அரசை விமர்சிக்கக்கூடாது என்பதற்காக கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேச மறுக்கிறது. கூட்டணி கட்சி என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு கள்ளக்குறிச்சி குறித்து காங்கரஸ் வாய்திறக்க வேண்டும்.

Jun 23, 2024 - 18:32
கள்ளக்குறிச்சியில் தலித்துகள் இறக்கிறார்கள்... ராகுல் காந்தி எங்கே?... நிர்மலா சீதாராமன் கேள்வி!
நிர்மலா சீதாராமன்

டெல்லி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து ராகுல் காந்தி இதுவரை வாய் திறக்காதது ஏன்? என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி என்பவர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த பலர் இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.

இதை குடித்த பலர் கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். மேலும் சிலர் மயங்கி விழுந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் பலர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 57 இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளச்சாராயத்துக்கு 57 பேர் உயிரிழந்தது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ''தமிழ்நாடு அரசு கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறியதே உயிரிழப்புக்கு காரணம். இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்'' என்று அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 56 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் பெரும்பாலானோர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். 

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட கருத்து கூறாதது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எங்கே? ராகுல் காந்தி எங்கே? தேர்தலின்போது வாக்குகளுக்காக  தமிழ்நாடு குறித்து பேசும் ராகுல் காந்தி கள்ளக்குறிச்சியில் தலித்துகள் உயிரிழக்கும் நிலையில், ஒரு அறிக்கை கூட வெளியிடாதது ஏன்?

காங்கிரஸ் தமிழ்நாட்டில் தங்களது கூட்டணி கட்சியான ஆளும் திமுக அரசை விமர்சிக்கக்கூடாது என்பதற்காக கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேச மறுக்கிறது. கூட்டணி கட்சி என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு கள்ளக்குறிச்சி குறித்து காங்கரஸ் வாய்திறக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்து இடங்களிலும் உள்ள நிலையில், கள்ளக்குறிச்சியி நகரின் மையத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இது அரசுக்கு தெரியாதா? கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow