'நீட்' முறைகேடு... சாட்டையை சுழற்றும் சிபிஐ; வழக்குப்பதிவு... 1,563 பேருக்கு இன்று மறுதேர்வு!

நீட் தேர்வில் மாணவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வினாத்தாள்களை கசிய விட்டது, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடந்தது தொடர்பாக இடைத்தரர்கள், மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

Jun 23, 2024 - 17:47
'நீட்' முறைகேடு... சாட்டையை சுழற்றும் சிபிஐ; வழக்குப்பதிவு... 1,563 பேருக்கு இன்று மறுதேர்வு!
சிபிஐ

டெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு இன்று மறுதேர்வு நடந்தது.

இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மிக கடினமான இந்த தேர்வில் வெற்றி பெற முடியாமல் பல்வேறு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் தமிழ்நாடு அரசு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் இல்லை தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

ஆனால் மத்திய அரசு இதை கண்டுகொள்ளாமல் நீட் தேர்வை நடத்தி வருகிறது. இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வில் ஆள்மாறாட்டம், முன்கூட்டியே வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடு நடந்திருப்பதாக அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதாவது எப்போதும் இல்லாத வகையில் 67 பேர் முதலிடம் பிடித்து இருந்தனர். பெரும்பாலானோர் 720க்கு 720 மதிப்பெண்களும், 720க்கு 719 மதிப்பெண்களும் பெற்றதால் சந்தேகம் எழுந்தது. அதிலும் ஹரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முதலிடம் பிடித்து இருந்ததால் இந்த சந்தேகம் உறுதியானது.

இதனால் 'நீட்' மறு தேர்வு நடந்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்த தேசிய தேர்வு முகமை, ''கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு ஜூன் 23ம் தேதி (இன்று) மறுதேர்வு நடத்தி, 30ம் தேதி முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 
மறுதேர்வு எழுத விரும்பாத மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண்களை கழித்து, அவர்களின் அசல் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்'' என்று கூறியது. 

மேலும் குஜராத், பீகார், மகாராஷ்டிரா உள்பட சில மாநிலங்களில் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் வெட்டவெளிச்சமானது. அதாவது மாணவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வினாத்தாள்களை கசிய விட்டது, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடந்தது தொடர்பாக இடைத்தரர்கள், மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன்பின்பு நீட் தேர்வில் முறைகேட்டில் நடந்ததை ஒப்புக்கொண்ட மத்திய கல்வி அமைச்சகம், இது தொடர்பான வழக்குகளை சிபிஐ விரிவான விசாரணை நடத்தும் என்று அறிவித்தது. அதன்படி வழக்கை கையில் எடுத்த சிபிஐ,  நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது. 

ஆள்மாறாட்டம், வினாத்தாள்கள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள், நீட் தேர்வு பயிற்சி மையங்களை நடத்துபவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். 

இந்நிலையில், தேசிய தேர்வு முகமை ஏற்கெனவே அறிவித்தபடி, கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு நீட் மறுதேர்வு இன்று மதியம் நடைபெற்றது. இதில் பலர் தேர்வை எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். தேர்வை எழுதாதவர்களுக்கு கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மறுதேர்வு முடிவுகள் வரும் 30ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow