Indian2 Box Office: மொத்தமாக படுத்துவிட்ட இந்தியன் 2... 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவு தானா?
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 கடந்த வாரம் வெளியான நிலையில், இந்தப் படத்தின் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: கமல் – ஷங்கர் காம்போவில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்துக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்தது. 1996ம் ஆண்டு ரிலீஸான இந்தியன் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்திருந்தது. முதல் பாகத்தின் இறுதியில் இந்தியன் தாத்தா சேனாபதி இந்தியாவில் இருந்து தப்பிவிடுவதாக முடித்திருந்தார் இயக்குநர் ஷங்கர். இதனால் அப்போது முதலே இந்தியன் 2 படத்துக்கு ஹைப் இருந்தது. கமல், இயக்குநர் ஷங்கர் இருவரிடமும் இந்தியன் 2 எப்போது உருவாகும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர்.
ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற சுமார் 23 ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது 2018ல் இந்தியன் 2 ப்ராஜெக்ட்டை தொடங்கினார் ஷங்கர். லைகா தயாரிப்பில் கமல், ஷங்கர் இருவரும் மீண்டும் இணைய, இவர்களுடன் ஏஆர் ரஹ்மானுக்குப் பதிலாக அனிருத் உள்ளே வந்தார். அப்போதே ரசிகர்களுக்கு இந்தக் கூட்டணியில் கொஞ்சம் அதிருப்தி இருந்தது. ஆனாலும், அனிருத் அடுத்தடுத்து ஹிட் கொடுத்துக்கொண்டே வந்ததால், இந்தியன் 2வில் ஏதாவது மேஜிக் இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், இந்தியன் 2 ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர், ட்ரெய்லர் ஆகியவற்றில் அனிருத்தின் இசை ரசிகர்களை ஏமாற்றிவிட்டது.
சரி ஆனது ஆகட்டும், படமாவது செமையாக இருக்கும் என ரசிகர்கள் ஃபயர் விட்டு வந்தனர். ஆனால், கடந்த வாரம் ரிலீஸான இந்தியன் 2, ரசிகர்களை கதறவிட்டுள்ளது. ஷங்கரின் பெரும் பலமாக காணப்பட்ட எழுத்தாளர் சுஜாதாவும், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானும் இல்லையென்றால், என்னவாகும் என்பதற்கு உதாரணமாக இந்தியன் 2 அமைந்துள்ளது. 5 ஆண்டுகளாக பல தடைகளை கடந்து வெளியான இந்தியன் 2, முதல் நாளில் இருந்தே நெகட்டிவான விமர்சனங்களால் தடுமாறியது. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் இந்தியன் 2 படத்துக்கு எதிர்பார்த்த கலெக்ஷன் கிடைக்கவில்லை.
ஒருகட்டத்தில் இந்தியன் 2 டிசாஸ்டர் என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு, இந்தியன் 2வில் இருந்து 20 நிமிட காட்சிகளை எடிட் செய்தும் பார்த்துவிட்டது. ஆனாலும் இந்தியன் 2 படத்துக்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை. இதன் காரணமாக முதல் நாளில் இந்தியன் 2 திரைப்படம் 25 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தது. சனிக்கிழமையான இரண்டாவது நாள் 18 கோடியும், ஞாயிற்றுக்கிழமை 15 கோடி ரூபாயும் மட்டுமே வசூலித்ததாக சொல்லப்பட்டுகிறது. இந்நிலையில், நான்காவது நாளான நேற்று, அதாவது வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை, வெறும் 5 கோடி மட்டுமே கலெக்ஷன் செய்துள்ளதாம் இந்தியன் 2.
அதன்படி, இந்தியன் 2 திரைப்படம் நான்கு நாட்களில் மொத்தம் 63 முதல் 70 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளது. கமல், ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் 2, பாக்ஸ் ஆபிஸை சிதறடிக்கும் எனவும், கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் எனவும் ரசிகர்கள் கனவு உலகத்தில் இருந்தனர். ஆனால், இப்போதிருக்கும் நிலையை பார்த்தால், 100 கோடி வசூலை கடப்பதே பெரும்பாடு தான் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
What's Your Reaction?