Amaran: ராஜ்கமல் பிலிம்ஸின் சஸ்பென்ஸ்... ட்ரெண்டிங்கில் அமரன்... இது இயக்குநருக்கு தெரியுமா?
”This Wednesday” என ராஜ்கமல் பிலிம்ஸ் கொடுத்துள்ள சஸ்பென்ஸ் டிவிட்டர் பதிவை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சென்னை: கமல் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தின் தோல்வி தான், தற்போதையை டாக் ஆஃப் கோலிவுட். ஷங்கர் இயக்கிய இந்தப் படத்துக்காக தாறுமாறாக ப்ரோமோஷன் செய்தும், பாக்ஸ் ஆபிஸில் சுத்தமாக ஓபனிங் கிடைக்கவில்லை. இப்படத்தின் அடுத்த பாகமான இந்தியன் 3 அடுத்தாண்டு வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், அதன் டிவிட்டர் பக்கத்தில் ‘This Wednesday’ என பதிவிட்டுள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது இந்தியன் 3 ரிலீஸ் அப்டேட்டா, அல்லது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தின் அப்டேட்டா என ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். ஆனால் இந்த இரண்டும் இல்லை, இது சிவகார்த்திகேயனின் அமரன் பட அப்டேட் என தெரியவந்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள அமரன் படத்துக்கு, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோ பிக் மூவியாக அமரன் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் முதன்முறையாக ஆர்மி ஆபிஸராக நடித்துள்ளதும் அவரது ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது. அமரன் திரைப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வரும் புதன் கிழமை வெளியாகும் அப்டேட் அமரன் ரிலீஸ் தேதி பற்றியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ்க்கும் இடையே பஞ்சாயத்து எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, அமரன் படத்தின் படப்பிடிப்பு நாட்களையும் பட்ஜெட்டையும் எகிற வைத்துவிட்டாராம் ராஜ்குமார் பெரியசாமி. அதோடு தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் பாடாய்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பார்க்க வேண்டாம் என ராஜ்கமல் பிலிம்ஸ் தடை போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் அமரன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இதுவரை முடிவு செய்யவில்லை எனவும், அதற்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
What's Your Reaction?