நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை - அறிக்கை வெளியிட்டது மருத்துவமனை
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது.அவர் நன்றாக இருக்கிறார். இரண்டு நாட்களில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என கூறப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று மாலை ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி, சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஆகியவற்றால் அனுமதிக்கப்பட்டதாகவும் பரிசோதனைகள் அனைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஐசியூ வார்டில் இருந்து இன்று ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், 2 நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் ரஜினிகாந்த் செப்.30ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான இரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சை அளிக்கப்பட்டது. இருதயநோய் மருத்துவர் சாய் சதீஷ் ஸ்டென்டை வைத்து வீக்கத்தை முழுவதுமாக சரிசெய்துள்ளார். திட்டமிட்டபடி சிகிச்சை நடந்து முடிந்துள்ளது என்பதை அவரது நலம் விரும்பிகளுக்கும், ரசிகர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறோம். மேலும், நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது.அவர் நன்றாக இருக்கிறார். இரண்டு நாட்களில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார்” என கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?