ரூ.290 கோடி ஒரே நாளில் கல்லா கட்டிய டாஸ்மாக் வசூல்.. 3 நாட்கள் லீவு.. மூட்டை கட்டிய குடிமகன்கள்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் இரண்டு மடங்கு அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு ரூ.290 கோடி வசூலானதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 19) ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தலையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் 17-ஆம் தேதி (நேற்று) முதல் 19-ஆம் தேதி வரை 3 நாட்கள் மூடப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில் தேர்தலையொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதையொட்டி கடந்த 16ஆம் தேதியே மதுபிரியர்கள் தங்களுக்கு வேண்டிய மதுபாட்டில்களை வாங்கி குவித்து வைத்தனர். பலரோ மூட்டை மூட்டையாக மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் ஏப்ரல் 16ஆம் தேதி ஒரே நாளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பண்டிகை காலங்களை போன்ற விற்பனையை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, தமிழகத்தில் செவ்வாய்கிழமை மட்டுமே ரூ.289.29 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.68.35 கோடி வசூலாகி உள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ.58.65 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.57.30 கோடியும், மதுரை மண்டலத்தில் ரூ.55.87 கோடியும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இது தமிழகத்தில் வழக்கமாக நாட்களை விற்பனையாவதை காட்டிலும், 2 மடங்கு என டாஸ்மாக் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
What's Your Reaction?