உதவித்தொகை விவகாரம்.. வன்னியரசு VS மாணவர்...முற்றுப்புள்ளி எப்போது?

மலேசியாவில் PhD பயிலும் மாணவர் பாரதிதாசனின் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை தாமத விவகாரத்தில், அரசு விளக்கமும் மாணவரின் பதிலும் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது.

Sep 18, 2026 - 10:51
Sep 18, 2026 - 10:56
உதவித்தொகை விவகாரம்.. வன்னியரசு VS மாணவர்...முற்றுப்புள்ளி எப்போது?

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், கல்வி உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி கண்ணீர் மல்க சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், மாணவர் பாரதிதாசனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே, அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சமூக நீதித் துறை விளக்கம் அளித்துள்ளது.

அதில்,

  • இரண்டாம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என மாணவர் கூறுவது தவறான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், வாழ்க்கை செலவினம் மற்றும் இதர செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.36 லட்சம் வரை வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
  • மலேசியாவில் ஆய்வு படிப்பு மேற்கொண்டு வரும் பாரதிதாசனுக்கு முதலாமாண்டுக்கான ரூ.36 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முதலாமாண்டு தொகைக்கான செலவு விவரங்களை வழங்காமல், இரண்டாம் ஆண்டுக்கான தொகையை மாணவர் கோரியதாக சமூக நீதித் துறை தெரிவித்துள்ளது.
  • இருப்பினும் மாணவருக்கு ரூ.12 லட்சம் விடுவிக்கப்பட்டதாகவும், கூடுதல் செலவுகள் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி மாணவரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும், இதுவரை முழுமையான விளக்கம் கிடைக்கவில்லை என்றும் சமூக நீதித் துறை தெரிவித்துள்ளது.

மாணவர் பயிலும் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டு செப்டம்பர் 17ஆம் தேதி மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகத்தின் பதில் கிடைத்ததும் கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த மாணவர் பாரதிதாசன், கல்வி உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை என கூறி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,

“ரூ.37 லட்சத்திற்கான செலவு விவரங்களை அனுப்பியுள்ளேன். அதற்கான ரூ.36 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது. பில்களை அனுப்பவில்லை என்று மீண்டும் மீண்டும் கூறுவது தவறானது. ஆராய்ச்சி செலவுகளுக்கான பில்களை ஆகஸ்ட் 26ஆம் தேதியே அனுப்பிவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “என் மீது தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஆராய்ச்சி படிப்பிற்கான தேவைகள் குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளேன். இந்த திட்டத்தில் பயிலும் மாணவர்களின் முழு விவரங்களையும் அரசு வெளியிட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாணவர் பாரதிதாசனின் குற்றச்சாட்டுகளும், சமூக நீதித் துறையின் விளக்கமும் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow