ஜனநாயகன் தாமதம், Spiderman கட்... ! தொடர் சர்ச்சைகளால் மாறிய CBFC ?

7 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) புதிய 18 பேர் கொண்ட குழுவுடன் மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய திரை பிரபலங்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

Sep 17, 2026 - 18:30
ஜனநாயகன் தாமதம், Spiderman கட்... ! தொடர் சர்ச்சைகளால் மாறிய CBFC ?
New CBFC Board Announced

இந்திய திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்கும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமான (CBFC) புதிய குழுவை மத்திய அரசு மறுசீரமைத்துள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் செப்டம்பர் 16-ம் தேதி புதிய 18 பேர் கொண்ட குழு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திரைத்துறை மற்றும் பொழுதுபோக்கு உலகில் பிரபலமான பலருக்கு இந்த புதிய குழுவில் இடம் வழங்கப்பட்டுள்ளது. நடிகர்கள் பிரீத்தி ஜிந்தா, பங்கஜ் திரிபாதி, சுனில் ஷெட்டி, பல்லவி ஜோஷி, பிரசன்ஜித் சாட்டர்ஜி, ரூபாலி கங்குலி உள்ளிட்டோர் புதிய CBFC குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இயக்குநர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் உள்ளிட்ட படைப்புத் துறையைச் சேர்ந்த முக்கிய நபர்களும் இந்த குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

3 ஆண்டுகளுக்கு செயல்படும் புதிய CBFC குழு :

மத்திய அரசின் அறிவிப்பின்படி, புதிய CBFC குழு உடனடியாக செயல்பாட்டுக்கு வருகிறது. இந்த குழு 3 ஆண்டுகள் அல்லது மத்திய அரசு அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBFC தலைவராக ஷஷி சேகர் வெம்பட்டி தொடர்ந்து பதவி வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பு, 1952-ம் ஆண்டு இயற்றப்பட்ட சினிமாட்டோகிராப் சட்டத்தின் பிரிவு 3(1) மற்றும் 2024-ம் ஆண்டு சினிமாட்டோகிராப் (சான்றிதழ்) விதிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2017-க்கு பிறகு முதல் முறையாக CBFC மறுசீரமைப்பு :

CBFC குழு கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக மாற்றப்பட்டுள்ளது.

முந்தைய CBFC குழு 2017 ஆகஸ்ட் மாதம் அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாக இருந்தாலும், புதிய குழு நியமிக்கப்படாத காரணத்தால் அதன் உறுப்பினர்கள் தொடர்ந்து பணியில் இருந்தனர்.

தற்போதைய அறிவிப்பின் மூலம் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த அந்த குழுவுக்கு பதிலாக புதிய 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

பழைய குழுவில் இருந்த இருவருக்கு மீண்டும் வாய்ப்பு :

முந்தைய CBFC குழுவில் இடம்பெற்றிருந்த வாமன் கேந்திரே மற்றும் ரமேஷ் படாங்கே ஆகிய இருவரும் புதிய குழுவிலும் தொடர்கின்றனர்.

கடந்த குழுவில் நடிகை வித்யா பாலன், விவேக் அக்னிஹோத்ரி, கவுதமி தாடிமல்லா உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக இருந்தனர்.

திரைப்பட சான்றிதழ் விவகாரங்களுக்கு மத்தியில் புதிய மாற்றம் :

திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்கும் நடைமுறை, காட்சிகள் நீக்கம், வெளியீட்டு தாமதம் போன்ற விவகாரங்கள் குறித்து CBFC தொடர்ந்து கவனத்தில் இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக, சமீபத்தில் ஹாலிவுட் திரைப்படமான ‘Spider-Man: Brand New Day’ இந்தியாவில் UA 13 சான்றிதழ் பெற்றது. அந்த படத்தில் இடம்பெற்ற சில நொடிகள் கொண்ட முத்தக் காட்சி நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதன் மூலம் இளம் பார்வையாளர்களுக்கான உள்ளடக்க விதிமுறைகள் குறித்து மீண்டும் விவாதம் எழுந்தது.

அதேபோல், நடிகர் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் சான்றிதழ் தொடர்பான நடைமுறைகளும் கவனம் பெற்றன.

ஹெச். வினோத் இயக்கிய இந்த படத்தில் மமிதா பைஜு, பாபி டியோல், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரைப்படத்தின் ஆய்வுக்குழு முடிவுக்குப் பிறகு, ஒரு புகாரின் அடிப்படையில் படம் மறுபரிசீலனை குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதனால் வெளியீடு தாமதமானது.

பின்னர் சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு திரைப்படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது.

திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சான்றிதழ் வழங்கும் நடைமுறைகள் குறித்து பல்வேறு கருத்துகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், இந்த புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் திரைப்படங்களின் காட்சிகள் நீக்கம், சான்றிதழ் பிரிவு மாற்றங்கள் மற்றும் வெளியீட்டு தாமதங்கள் தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில், புதிய குழு அமைக்கப்பட்டதற்கு ஜனநாயகன் படத்தை சான்றிதழ் தராததுதான் காரணம் என்று விஜய் ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். 

புதிய CBFC குழுவின் முக்கிய பொறுப்புகள் என்ன? 

புதிய குழு, இந்தியாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கான சான்றிதழ் நடைமுறைகளை மேற்பார்வையிடும்.

சினிமாட்டோகிராப் (சான்றிதழ்) விதிகள் 2024-ன் கீழ் உருவாகி வரும் புதிய நடைமுறைகளுக்கு ஏற்ப, திரைப்படங்களின் வகைப்பாடு, சான்றிதழ் வழங்கும் செயல்முறை மற்றும் மறுபரிசீலனை நடவடிக்கைகளில் இந்த குழு முக்கிய பங்கு வகிக்கும்.

திரைப்படம், இசை, இலக்கியம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு படைப்புத் துறைகளைச் சேர்ந்த அனுபவமிக்க நபர்கள் புதிய குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

புதிய CBFC குழுவை திரையுலகம் உன்னிப்பாக கவனிக்கும் :

புதிய குழு அடுத்த 3 ஆண்டுகளுக்கு திரைப்பட சான்றிதழ் தொடர்பான முக்கிய முடிவுகளில் பங்கேற்கும்.

திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சான்றிதழ் நடைமுறை, காட்சிகள் நீக்கம் மற்றும் திரைப்பட வெளியீட்டு காலதாமதம் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த புதிய குழுவின் செயல்பாடுகள் கவனத்தை பெற்றுள்ளன.

CBFC புதிய உறுப்பினர்கள் முழு பட்டியல் :

புதிய 18 பேர் கொண்ட CBFC குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள்:

* பிரீத்தி ஜிந்தா
* சுனில் ஷெட்டி
* ரூபாலி கங்குலி
* பல்லவி ஜோஷி
* பங்கஜ் திரிபாதி
* பிரசன்ஜித் சாட்டர்ஜி
* மனோஜ் ஜோஷி
* வினோத் அனுபம்
* அபிஷேக் ஜெயின்
* ரிக்கி கேஜ்
* பிரியதர்ஷன்
* ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ்
* சுப்ரியா யர்லகட்டா
* யதிந்திர மிஸ்ரா
* நீல மாதப் பாண்டா
* நிஷிகந்தா வாட்
* வாமன் கேந்திரே
* ரமேஷ் படாங்கே

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow