ஏமாற்றியதே ராதா தான்?... அம்பலப்படுத்திய அம்பிகா?

ரூ.46 கோடி மோசடி செய்ததாக கூறி, தனது சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை அம்பிகா விளக்கம் அளித்துள்ளார்.

Sep 23, 2026 - 13:16
ஏமாற்றியதே ராதா தான்?... அம்பலப்படுத்திய அம்பிகா?
Ambika press meet

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்தவர்கள் சகோதரிகளான அம்பிகா, ராதா. இவர்களுக்கு சென்னையில் ஏஆர்எஸ் கார்டன் என்ற பெயரில் இடம் மற்றும் சொத்துக்கள் உள்ளன.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையரிடம் நடிகை ராதா புகார் ஒன்றை அளித்தார். அதில், சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்த காசோலையை திருடி, நடிகை அம்பிகா மற்றும் தனது தம்பி மல்லிகார்ஜூன் குஞ்சன் நாயர் ஆகியோர் ரூ.46 கோடி மோசடி செய்ய முயற்சி செய்ததாக தெரிவித்திருந்தார்.

மேலும், இது குறித்து பேச போன் செய்தால் அம்பிகா அழைப்பை எடுப்பதில்லை என்றும், தன்னை அந்த வீட்டிற்குள் கூட அனுமதிப்பதில்லை என்றும் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் ராதா பேட்டியளித்திருந்தார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகை அம்பிகா, “ஏஆர்எஸ் சொத்தில் 50 சென்ட் நிலம் தொடர்பாக மோசடி நடந்துள்ளது. ஏஆர்எஸ் கார்டன் ஸ்டூடியோவில் எனக்கு மூன்றில் ஒரு பங்கு உரிமை உள்ளது. நிலம், தங்க நகை மோசடி மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் போன்றவற்றை மறைத்து ராதா நாடகமாடுகிறார். அவர் அளித்த புகார் உண்மைக்கு புறம்பானது” என தெரிவித்திருந்தார்.

ராதா தான் சிறைக்கு செல்ல நேரிடும்

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை அம்பிகா கூறியதாவது: “ஏஆர்எஸ் கார்டன் தொடர்பான விஷயத்தில்தான் பிரச்னை உள்ளது. ஏஆர்எஸ் கார்டன் உருவாக முக்கிய காரணமாக இருந்தது நான் தான். இதை எம்ஜிஆர் கொடுத்தார் என்பது தவறான தகவல். இது எனது உழைப்பில் உருவானது.

ஏஆர்எஸ் கார்டன் சொத்தில் இருந்து எனது பெயரை நீக்கிவிட்டனர். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே. நான் என்ன செத்துப் போய்விட்டேனா?

தங்கம் என்றாலே என் சகோதரி ராதாவுக்கு மிகவும் பிரியம். என் பெயரில் உள்ள தங்கத்தையும் அவர்தான் வைத்துள்ளார். சொத்து பிரச்னையை தீர்க்க செக் கொடுத்தது ராதா தான். பின்னர் அதை நிறுத்தியதும் அவர்தான்.

செக் பவுன்ஸ் ஆனது, பணம் போனது எனக்குதான். நான் தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். நான் உண்மையை சொன்னால் ராதா தான் சிறைக்கு செல்ல நேரிடும்.

செக்கில் கையெழுத்து போட்டுவிட்டு, அதை என் வீட்டில் ஏன் வைத்துவிட்டு செல்ல வேண்டும்? ஹேண்ட் பேக்கிற்கே லாக் போடும் ராதா, இவ்வளவு பெரிய தொகைக்கான செக்கை வீட்டில் வைத்துவிட்டு போவாரா?

அவரது மகள் திருமணத்திற்கு நான் சென்று இருந்தேன். அனைத்து வேலைகளையும் நான் இழுத்துப் போட்டு வேலைக்காரி போல செய்தேன். ராதா தான் எங்களுக்கு ரூ.97 கோடி தர வேண்டும். ஆனால், என் மீது மோசடி புகார் அளித்தது வேதனை அளிக்கிறது” என்றார்.

கண்ணீர் மல்க பேசிய அம்பிகா

“தவறு செய்துவிட்டு முந்திக்கொள்வதைப் போல ராதா செயல்படுகிறார். குடும்ப விவகாரம் வெளியே தெரிய வேண்டாம் என நினைத்தேன். ஆனால் ராதா அவ்வாறு செயல்படவில்லை. எங்கள் அம்மா நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்பினார். ஆகையால், சமரசம் செய்ய பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்.

எனது இன்ஸ்டாகிராமில் ‘படிக்காதவன்’ படத்தில் வரும் ‘பணம் காசு கண்டுபிடித்தா புலிக்கூட புல்லை தின்னும்’ என்ற பாடல் வரிகளை ராதாவுக்காகத்தான் பதிவிட்டேன். என்னை திருடியதாக கூறியதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என கண்கலங்கியபடி தெரிவித்தார். இவ்வாறு நடிகை அம்பிகா தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow